Switzerland-ன் Obwalden Canton, Sarnen பகுதியில் தங்கம் வாங்கும் நபர்களை பொலிஸார் சோதனை செய்தபோது, மோசடியான நடைமுறைகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
செப்டம்பர் 5 முதல் 7 வரை Sarnen பகுதியில் தங்கம் மற்றும் பெறுமதியான பொருட்களை வாங்கியவர்களை Kantonspolizei Obwalden சோதனை செய்தது.
விசாரணையில், சில பொருட்கள் அவற்றின் உண்மையான பெறுமதியைவிட மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விற்பனை செய்தவர்கள் தங்களுக்கு நியாயமான விலை வழங்கப்படுவதாக நம்பியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், சட்டப்படி பராமரிக்க வேண்டிய ஆவணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படாததுடன், சில சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்ட ரசீதுகள் பின்னர் மாற்றப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக Switzerland-ல் வசிப்பிடமில்லாத 33 மற்றும் 21 வயதுடைய இரண்டு ஜெர்மன் பிரஜைகள் மீது மோசடி, ஆவணப் போலியாக்கம் மற்றும் விலைமதிப்புள்ள உலோகங்கள் தொடர்பான சட்ட மீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தங்கம் அல்லது நகை விற்கும்போது கவனம்
விற்பதற்கு முன்பு உங்கள் தங்கத்தின் எடை, கரட் மற்றும் தற்போதைய சுமார் சந்தை மதிப்பை தெரிந்துகொள்ளுங்கள். ஒரே இடத்தில் உடனடியாக விற்காமல் பல நகைக்கடைகள் அல்லது Goldankäufer-களிடம் விலை கேட்டு ஒப்பிடுங்கள்.
தங்கத்தை உங்கள் கண் முன்னால் எடை போடச் சொல்லுங்கள். விற்பனைக்கு முன்பு நகைகளை புகைப்படம் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். எடை, தங்கத்தின் தரம், விலை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் உள்ள முழுமையான ரசீதைப் பெறுங்கள்.
யாராவது உடனடியாக விற்குமாறு அழுத்தம் கொடுத்தால் அவசரப்பட வேண்டாம். சந்தேகம் ஏற்பட்டால் பொலிஸ் 117 எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
தகவல் மூலம்: Kantonspolizei Obwalden / PolizeiTicker


