பேர்ன்: Spiez மற்றும் Thunersee பகுதியில் தாழ்வாகப் பறந்த இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் வானில் காணப்பட்ட ஒளிரும் Flare-கள் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இது அவசரநிலை அல்ல; சுவிஸ் இராணுவமும் பேர்ன் கன்டோன் பொலிஸாரும் இணைந்து நடத்திய “FIDES26” பாதுகாப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாகும்.
செப்டம்பர் 12 முதல் 15 வரை நடைபெற்ற இந்தப் பயிற்சியில், பேர்ன் பகுதியில் நீண்டகால கலப்பு அச்சுறுத்தல் மற்றும் பல தாக்குதல்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்தால் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது ஒத்திகை செய்யப்பட்டது. Spiez-இல் அணு, உயிரியல் மற்றும் இரசாயன அபாயங்களைக் கையாளும் ABC-KAMIR நிபுணத்துவ மையமும் முக்கிய பயிற்சி இடமாகப் பயன்படுத்தப்பட்டது.
முக்கிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதில் பொலிஸாரும் இராணுவமும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதைச் சோதிப்பதே பயிற்சியின் நோக்கம். பயிற்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் அதன் முடிவுகள் சாதகமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
தகவல் மூலம்: சுவிஸ் இராணுவம் / Kantonspolizei Bern


