சுவிட்சர்லாந்து | 14.09.2026
சுவிட்சர்லாந்தில் வீடு தேடுவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. நாட்டின் காலி வீடுகளின் விகிதம் 0.93% ஆகக் குறைந்துள்ளது. இது 1%க்கும் கீழே சென்றுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தில் வீட்டுவசதி பற்றாக்குறை மேலும் தீவிரமடைந்துள்ளதை புதிய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
சுவிஸ் மத்திய புள்ளிவிவர அலுவலகத்தின் (BFS/FSO) தரவுகளின்படி, 2026 ஜூன் 1ஆம் தேதி நாடு முழுவதும் 45,493 வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் காலியாக இருந்தன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.1% குறைவாகும். 2021 முதல் நாட்டின் காலி வீடுகளின் விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2024இல் 1.08% ஆக இருந்த இந்த விகிதம், 2025இல் 1% ஆகவும் தற்போது 0.93% ஆகவும் குறைந்துள்ளது.
குறிப்பாக Zug மாநிலத்தில் வீட்டு பற்றாக்குறை மிகவும் கடுமையாக உள்ளது. அங்கு காலி வீடுகளின் விகிதம் வெறும் 0.20% மட்டுமே. Genevaவில் 0.31% ஆகவும், Obwaldenஇல் 0.38% ஆகவும் பதிவாகியுள்ளது. இதற்கு மாறாக Juraவில் 3.35% மற்றும் Solothurnஇல் 1.91% என காலி வீடுகளின் விகிதம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.
Zürich மாநிலத்தில் மட்டும் காலி வீடுகளின் விகிதம் சற்றே அதிகரித்து 0.52% ஆகியுள்ளது. அதேவேளை, சுவிட்சர்லாந்தின் 20 மாநிலங்களில் 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது காலி வீடுகளின் விகிதம் குறைந்துள்ளது.
வாடகைக்கு கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. 2026 ஜூன் 1 நிலவரப்படி நாடு முழுவதும் 34,690 வாடகை வீடுகள் காலியாக இருந்தன. இது 2025ஆம் ஆண்டைவிட 2,504 வீடுகள் குறைவாகும்; அதாவது 6.7% வீழ்ச்சி. தனிக்குடும்ப வீடுகளின் காலியிட எண்ணிக்கையும் முந்தைய ஆண்டைவிட 4.4%, அதாவது 301 வீடுகளால் குறைந்துள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள் சுவிட்சர்லாந்தில் வீடு தேடும் மக்களுக்கு போட்டி மேலும் அதிகரித்து வருவதையும், குறிப்பாக Zug, Geneva மற்றும் Obwalden போன்ற பகுதிகளில் பொருத்தமான வீடு கிடைப்பது மிகவும் சவாலானதாக மாறியுள்ளதையும் காட்டுகின்றன.
தகவல் மூலம்: Swiss Federal Statistical Office (BFS/FSO)


