Zürich நகரின் பாரம்பரிய Knabenschiessen துப்பாக்கிச் சுடும் போட்டியில், Turbenthal பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய Julian Zehnder 2026ஆம் ஆண்டின் Schützenkönig பட்டத்தை வென்றுள்ளார்.
போட்டியின் முதல் நாளான சனிக்கிழமை அவர் அதிகபட்சமாகப் பெறக்கூடிய 35 புள்ளிகளையும் பெற்றிருந்தார். திங்கட்கிழமை காலைவரை 3,400-க்கும் அதிகமான இளைஞர்கள் போட்டியில் பங்கேற்றபோதிலும், வேறு எவராலும் 35 புள்ளிகளைப் பெற முடியவில்லை. இதனால் Julian Zehnder நேரடியாக வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவர் மட்டுமே முழுமையான 35 புள்ளிகளைப் பெற்றவர் என்பதை Knabenschiessen ஏற்பாட்டாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Schützenverein Wiesental துப்பாக்கிச் சுடும் கழகத்தின் உறுப்பினரான Julian, துப்பாக்கிச் சுடுவது மனதை அமைதிப்படுத்த உதவுவதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
வெற்றிக்காக அவருக்கு CHF 5,000 பரிசுத் தொகை, Zunft zum Weggen அமைப்பின் பாரம்பரிய “Kettelithaler” மற்றும் நினைவுப் பரிசாக ஒரு தகரக் குடுவையும் வழங்கப்பட்டன. பரிசுத் தொகையில் Gaming PC ஒன்றை வாங்கவுள்ளதாகவும், மீதிப் பணத்தை எதிர்கால வாகன ஓட்டுநர் உரிமத்திற்காகச் சேமிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக துப்பாக்கிச் சுடும் கழகத்தில் பயிற்சி பெற்றுவரும் 16 வயதுடைய Melina Schiele, 34 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றார். இம்முறை 16 இளைஞர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.
1991ஆம் ஆண்டு முதல் பெண்களும் Knabenschiessen போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். இன்று Zürich நகரம் மற்றும் கன்டனைச் சேர்ந்த ஆண், பெண் இளைஞர்கள் ஒரே போட்டியில் Schützenkönig அல்லது Schützenkönigin பட்டத்திற்காகப் போட்டியிடுகின்றனர்.
இறுதிச் சுற்றில் Zürich நகரசபை உறுப்பினர் Michael Baumer மற்றும் Zürich கன்டன் அரசாங்க உறுப்பினர் Mario Fehr உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.


