Switzerland மக்களின் வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விநியோகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய Swiss நாடாளுமன்றத்தின் இலையுதிர்காலக் கூட்டத்தொடர் இன்று Bern நகரில் ஆரம்பமாகியுள்ளது. செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 2 வரை மூன்று வாரங்களுக்கு தேசிய சபையும் மாநிலங்களவையும் கூடவுள்ளன.
இந்தக் கூட்டத்தொடரின் முக்கிய விவகாரங்களில் ஒன்று EFTA–Mercosur தடையற்ற வர்த்தக ஒப்பந்தமாகும். Brazil, Argentina, Paraguay மற்றும் Uruguay ஆகிய தென் அமெரிக்க நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், Swiss இயந்திரங்கள், மருந்துகள் மற்றும் தொழில்துறைப் பொருட்களின் ஏற்றுமதிக்கு புதிய சந்தை வாய்ப்புகளை வழங்கக்கூடும்.
அதேவேளை, இறைச்சி மற்றும் விவசாயப் பொருட்களின் இறக்குமதி அதிகரிப்பதால் உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. இதனால் விவசாயத் துறைக்கு சுமார் அரை பில்லியன் Swiss franc பெறுமதியான பாதுகாப்பு மற்றும் துணை நடவடிக்கைகளை வழங்குவது குறித்தும் நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது.
இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடும் முக்கிய அரசியல் விவகாரமாக இடம்பெறுகிறது. வழக்கமான இராணுவ வரவுசெலவுத் திட்டமாகச் சுமார் CHF 3.4 பில்லியன் பரிசீலிக்கப்படுகிறது. இதற்கும் மேலாக, Switzerland-இன் நீண்டகாலப் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்த CHF 24 பில்லியன் பெறுமதியான சிறப்பு இராணுவ நிதியத்தை உருவாக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தொகைகள் இன்னும் இறுதி ஒப்புதலைப் பெறவில்லை. அவற்றுக்கான பணத்தை எங்கிருந்து பெறுவது என்பதே அரசியல் விவாதத்தின் மையமாக உள்ளது.
Switzerland-ல் தொடரும் அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொள்ள, மத்திய அரசுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதும் பரிசீலிக்கப்படுகிறது. மருந்து விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் சந்தர்ப்பங்களில் மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக்கூடிய சட்ட அடிப்படையை உருவாக்குவது குறித்து நாடாளுமன்றம் ஆராயவுள்ளது.
Switzerland–EU Bilaterals III ஒப்பந்தத் தொகுப்பும் இந்தக் கூட்டத்தொடரில் முக்கிய இடம் பெறுகிறது. அதன் பிரதான விவாதம் செப்டம்பர் 28 முதல் 30 வரை மாநிலங்களவையில் நடைபெறவுள்ளது. EU சட்டங்களைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளும் நடைமுறை, Swiss ஊதியப் பாதுகாப்பு, அதிக குடியேற்றத்தை எதிர்கொள்ளும் பாதுகாப்பு விதி மற்றும் இறுதி மக்கள் வாக்கெடுப்பில் கன்டன்களின் பெரும்பான்மையும் அவசியமா என்பவை முக்கிய கேள்விகளாக உள்ளன.
இந்த மூன்று வாரங்களில் ஒரு சபை எடுக்கும் முடிவு உடனடியாகச் சட்டமாகிவிடாது. பல முன்மொழிவுகளுக்கு தேசிய சபை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டினதும் ஒப்புதல் தேவைப்படும். சில முக்கிய விடயங்கள் இறுதியில் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்லக்கூடும்.


