மருத்துவமனையில் இருந்த குடும்பத்தவரைத் தேடி 24 கிலோமீற்றர் பயணித்த நாய்!

பேர்ன்: சுவிட்சர்லாந்தின் வாட்டன்வில் பகுதியில் காணாமல் போன “ஹாச்சிட்டோ” என்ற ஜப்பானிய அகிட்டா இன நாய், பேர்ன் நகரிலுள்ள Sonnenhof மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2020 டிசம்பர் 16ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றது. அப்போது ஹாச்சிட்டோவின் குடும்பத்தைச் சேர்ந்த கேதி ஷ்னைடர் நீண்டகாலமாக Sonnenhof மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அன்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற ஹாச்சிட்டோ, Worb, Rüfenacht, Gümligen மற்றும் Murifeld வழியாகச் சுமார் 12 கிலோமீற்றர் பயணித்து மருத்துவமனையின் நுழைவாயிலை அடைந்ததாக அதன் GPS கழுத்துப்பட்டையின் பதிவுகள் காட்டின.

மருத்துவமனை வாசலில் மஞ்சள் நிற நாய் ஒன்று நின்றதாக அங்கிருந்த ஊழியர்கள் பின்னர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். நாயை மருத்துவமனைக்குள் அனுமதிக்காததால், சிறிது நேரத்தில் அது அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

அன்றிரவு சுமார் 11 மணியளவில் ஹாச்சிட்டோ மீண்டும் வீட்டிற்குத் திரும்பியது. மருத்துவமனைக்குச் சென்று வீடு திரும்பிய மொத்தப் பயணத் தூரம் சுமார் 24 கிலோமீற்றர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தை நாய் சுமார் ஆறு மணிநேரத்தில் நிறைவு செய்துள்ளது.

ஹாச்சிட்டோ அந்த மருத்துவமனையை எவ்வாறு கண்டுபிடித்தது என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. குடும்பத்தவர்களின் கருத்துப்படி, மருத்துவமனையில் இருந்த கேதியின் இருப்பை அது உணர்ந்திருக்கலாம் அல்லது முன்னர் சென்ற பாதைகள் மற்றும் வாசனைகளை நினைவில் வைத்திருக்கலாம்.

தற்போது பத்து வயதாகும் ஹாச்சிட்டோ, அதன் பின்னர் இவ்வாறு வீட்டிலிருந்து தப்பிச் செல்வதில்லை எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தகவல் மூலம்: Bern-Ost
SUPEEDSAM செய்திப்பிரிவுக்காகச் சுயமாக மறுவடிவமைக்கப்பட்டது.