கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுகாதார பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் “பேராசிரியர் ரீ.வரகுணம் அரங்கம்” கோலாகலமாக திறந்துவைப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு, பிள்ளையாரடி ரோண்வூட் எஸ்டேட்டில் (Rainwood Estate) அமைந்துள்ள இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “பேராசிரியர் ரீ. வரகுணம் அரங்கம்” (Prof. T. Varagunam Auditorium) இன்று 02.09.2026 திகதி புதன்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பீ.பிரதீபன், சுகாதார பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ரீ.சதானந்தன் மற்றும் கல்வி, சாரா ஊழியர்கள் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன உள்ளிட்ட அதிதிகள் மலர் மாலை அணிவித்து பல்கலைக்கழக மாணவிகளின் பாரம்பரிய இனியம் பாண்ட் வாத்திய இசை முழங்க வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தேசிய கொடி மற்றும் பல்கலைக்கழக கொடி என்பன ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேராசிரியர் ரீ. வரகுணம் அரங்கத்திற்கான கல்வெட்டின் திரைச்சீலை நீக்கம் செய்யப்பட்டு, அரங்க முன் வாயில் நாடா வெட்டப்பட்டு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பேராசிரியர் ரீ. வரகுணம் அவர்களின் திருவுருவச் சிலைக்கான கௌரவத்தினை வழங்கும் பொருட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அவரிற்கான மரியாதை செலுத்தப்பட்டது.

பாரம்பரிய மங்கள விளக்கேற்றல், மௌன இறை பிரார்த்தனை, வரவேற்பு நடனம், பீடத்தின் “Therapeutic Tune” இசைக்குழுவின் அறிமுக நிகழ்வு, துணைவேந்தர் பேராசிரியர் பீ. பிரதீபன் அவர்களின் உரை, பிரதம விருந்தினர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன அவர்களின் சிறப்புரை என்பன இடம்பெற்றதனைத் தொடர்ந்து, பிரதம விருந்தினரிற்கான கௌரவிப்புடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

குறித்த நிகழ்வில் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள், மாநகர சபையின் ஆணையாளர், போராசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.