(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மருதமுனை செஸ்டோ ஸ்ரீலங்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 19ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மஸ்ஜித்களில் கடமையாற்றுகின்ற பேஷ் இமாம்கள் மற்றும் முஅத்தின்மார்களுக்காக அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், இறை இல்லப் பணியாளர்கள் மற்றும் சிரேஷ்ட ஆலோசகர்களை கண்ணியப்படுத்தும் நிகழ்வும் (30) மருதமுனை மழ்ஹருள் மக்பூலியா ஜும்ஆப் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.
செஸ்டோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் நாபி எம். முஸ்னீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா (நளீமி, MA) அவர்கள் சிறப்புரையாற்றினார்.
North London Lecture and Chaplain பதியுதீன் அப்துஸ் ஸமத் அவர்கள் விஷேட உரையை நிகழ்த்தியதுடன், ஓமான் சுல்தான் காபுஸ் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி எச்.எம். நஸிர் அவர்கள் கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
மருதமுனை பிரதேசத்தில் உள்ள 21 பள்ளிவாசல்களில் கடமையாற்றுகின்ற பேஷ் இமாம்கள் மற்றும் முஅத்தின்மார்களுக்கு, அவர்கள் சமூகத்திற்கும் இறை இல்லங்களுக்கும் ஆற்றிவரும் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டும் வகையிலும், பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ்களும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
அத்துடன், நீண்டகாலமாக கல்வி, இளைஞர், சமூக மற்றும் மார்க்கப் பணிகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ. அன்சார் மௌலானா (நளீமி, MA) அவர்களின் 33 வருட கல்விச் சேவையையும், நழீம் எம். வதுறுதீன் அவர்களின் 33 வருட அரச முகாமைத்துவ சேவையையும், எம்.ரீ.எம்.ஹாருன் அவர்களின் 29 வருட இளைஞர் மற்றும் சமூக சேவையையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், அல்-ஹாபிழ் அஷ்ஷெய்க் அப்துர் றஸ்ஸாக் முஹம்மத் ஜரீர் (பஹ்மி) – 23 வருட இமாமத் சேவை, அல்-ஹாபிழ் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.பைசால் கியாஸ் (பலாஹி, BA) – 20 வருட இமாமத் சேவை, எம்.எல். செய்யது அகமது மௌலானா – 37 வருட முஅத்தின் சேவை, ஏ. பதுறுத்தீன் – 33 வருட முஅத்தின் சேவை ஆகிய நீண்டகால இறை இல்லப் பணியாளர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள் வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டனர்.
நிகழ்வுகளின் ஒழுங்கமைப்பையும் நெறிப்படுத்தலையும் நிறுவனத்தின் பிரதித் தலைவர் எம்.ஐ. பௌமி மற்றும் செஸ்டோ சமய கலாசார பேரவையின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் றிழா கமால்தீன் ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர்.
நன்றியுரையை நிறுவனத்தின் உயர்பீட உறுப்பினர் ஜே.எம். ஹபீழ் அவர்கள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர்கள், நிர்வாகிகள், சமூக நலன்விரும்பிகள், ஊர்ப் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் அனுசரணையாளர்கள் மற்றும் செஸ்டோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு, இறை இல்லப் பணியாளர்களின் நீண்டகால அர்ப்பணிப்பை அங்கீகரித்து, அவர்களின் சேவையைப் பாராட்டுவதுடன், எதிர்கால தலைமுறையினரையும் சமூகப் பணிகளிலும் மார்க்கப் பணிகளிலும் ஈடுபட ஊக்குவிக்கும் ஒரு முன்மாதிரியான நிகழ்வாக அமைந்தது.
இங்கு சிறப்புரையாற்றிய
நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ.அன்சார் மௌலானா (நளீமி),
எமது சமுதாயத்தில் பாங்கு சொல்லும் மூத்த முஅத்தின்களும் இமாம்களும் மரணித்து விட்டால் மேற்படி இரண்டு துறைகளிலும் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இளம் முஅத்தின்கள், இமாம்கள் போதுமானதாக இல்லை என்ற சமுதாய கவலையினை மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா தலைவரும் செஸ்டோ ஸ்ரீலங்கா சமூக சேவை அமைப்பின் ஆலோசகருமான அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா வெளியிட்டார்.
முஅத்தின்களும், இமாம்களும் எமது சமுதாயத்தின் இரு கண்கள். ஒன்று பாதிக்கப்பட்டால் மற்றொன்றும் பாதிக்கப்படும். எனவே, இரு கண்களையும் கவனமாகப் பேணி அவர்களது நலன்கள், உரிமைகள் தொடர்பில் சகல மஸ்ஜிதுகளும் அக்கறை செலுத்துவதோடு, அவர்களது மரணப் பணிக்கொடைகளையும், பெருநாள் கால போனஸ் போன்றவற்றை தாராளமாக வழங்க செஸ்டோ ஸ்ரீலங்கா ஊக்குவிப்பை வழங்குகிறது.
கிழக்குக்கு வெளியே உள்ள ஏனைய மாகாணங்களில் குறிப்பாக கொழும்பு, கண்டி, காலி, நுவரெலியா போன்ற மஸ்ஜிதுகளில் பணியாற்றும் இறையில்லப் பணியாளர்கள் உச்சமாகக் கவனிக்கப்படவும், மகிழ்ச்சிப்படுத்தப்படவும் உரிய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனம் மேற்படி முன்னெடுப்புக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது.
இஸ்லாத்தில் இமாமத் எனும் தலைமைத்துவம் இரண்டு வகையில் அமைகின்றது. இமாமத் சுஃரா – சிறிய தலைமைத்துவம், இமாமத் குப்ரா- பெரிய தலைமைத்துவம். சிறிய தலைமைத்துவம் நாளாந்த ஐவேளை ஜமாஅத் தொழுகையின் மூலம் கிடைக்கிறது. அதனை பள்ளிவாசல் இமாம்கள் நிறைவேற்றி வருகின்றார்கள். தொழுவித்தலில் ஏதும் தவறு நிகழும் போது முன்னால் நிற்கும் மஃமூன்கள் அத்தவறை “சுப்ஹானல்லாஹ்” எனத் திருத்தி இமாமுக்கு உணரச் செய்கின்றனர். இதுதான் ஜமாஅத் தொழுகை எமக்குக் கற்றுத் தரும் பாடமாகும்.
இப்பாடத்தின் மூலம் பெரிய தலைமைத்துவம் சமுதாய வழிகாட்டலில் செல்வாக்குச் செலுத்துகின்றது. அதனை இமாமத் குப்ரா என்று அழைக்கின்றனர். இதன் மூலம் ‘மஸ்ஜிதின் இமாம் சமுதாயத்தின் இமாம்’ என்ற அந்தஸ்தை அடைகிறார். இவ்வேளை சமுதாயத்தின் ஆன்மீக தலைமைத்துவத்தினை மட்டுமாவது சமகால இமாம்கள் பெற்றிருக்கிறார்களா? என்பதே எம்முன் வைக்கப்படும் கேள்வியாகும். இக் கேள்விக்குப் பதில் அளிக்கும் பொறுப்பை அஷ்ஷெய்க் யூசுப் முப்தியின் தலைமையில் இயங்கும் ஸம்ஸம் பவுண்டேஷன் ஏற்று நாடளாவிய ரீதியில் VIP எனப்படும் Valued Imam Personality ஆளுமையும், விழுமியமும் உடைய இமாம்களை உருவாக்கும் பயிற்சித் திட்டங்களை மேற்கொண்டு வருவதால் ‘ஸம் ஸம் பவுண்டேஷன்’ செயற்பாடுகளில் மருதமுனை செஸ்டோ சமூக நிறுவனம் கைகோர்த்து ஒத்துழைக்கத் தயாராகின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை மௌலானா நளீமி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.


