( வி.ரி.சகாதேவராஜா)
சமகாலத்தில் நிலவும் எல்நினோ காலநிலை தாக்கம் தொடர்பில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சியின் ஒருங்கிணைப்பிலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமையிலும் நடைபெற்ற இவ்விசேட கூட்டம் நேற்று (1) நடைபெற்றது.
எல்நினோ நிலைமையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது கல்ஓயா ஆற்றுப்படுக்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியங்கள், நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாயத் திணைக்களம் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.ஆதம்பாவா, அப்துல் வாசித், சட்டத்தரணி பிரியந்த உள்ளிட்ட கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய நிறுவனங்கள் ஊடாக தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


