மட்டக்களப்பில் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் சான்றிதழ் வழங்கும் விழா

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில், தொழிற்பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிலுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா – 2026 இன்று (01) மட்டக்களப்பில் நடைபெற்றது.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் ரீ.வினோதராஜ் தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில் இன்று (01) நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, தொழிற்பயிற்சி அதிகாரசபையின் பல்வேறு துறைகளில் பயிற்சிகளை நிறைவு செய்த பயிலுநர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறை, வடிவமைப்பு மற்றும் ஆடைத் தொழில்நுட்பம், தனிநபர் மற்றும் சமூக சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

இளைஞர்களின் தொழில்திறனை மேம்படுத்தி, அவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முயற்சி வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தொழிற்பயிற்சிகளை வழங்குவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் போதனா ஆசிரியர்கள், துறைசார் நிபுணர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

“இன்றைய திறன் – நாளைய வாய்ப்பு – என்றும் வெற்றி” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, பயிலுநர்களின் எதிர்கால தொழில் பயணத்திற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.