( வாஸ் கூஞ்ஞ) 23.08.2026
மன்னார் சின்னக்கடை கிராம அலுவலகர் பிரிவிலுள்ள குருசு நகர் பகுதியில் குப்பையில் திடீரென ஏற்பட்ட தீயினால் அதன் சுற்றாடல் பகுதியில் வாழும் மக்கள் புகை மண்டலத்திற்குள் அகப்பட்டு தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறிய சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
மன்னாரில் தற்பொழுது நிலவி வரும் கடும் வெயிலால் குப்பைக்குள் கிடந்த கண்ணாடிகளில் சூரிய ஒளி ஈர்ப்பால் இத்தீ உருவாகியிருக்கலாம் என்ற சந்தேகமும் எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமை (22.08) மாலை நான்கு மணியளவில் மன்னார் சின்னக்கடை கிராம அலுவலகர் பிரிவிலுள்ள குருசு நகர் பகுதியில் மன்னார் நகர சபை தினசரி குப்பைகளை கொட்டும் பகுதியிலேயே இத்தீச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தெரிய வருவதாவது மன்னார் நகர சபைக்கு சொந்தமான 12 ஏக்கரில் 5 ஏக்கரில் மன்னார் நகர சபை தினசரி தனது பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை இந்த இடத்தில் கொட்டி வருகின்றது.
இந்த நிலையில் சம்பவம் அன்று திடீரென இக்குப்பையிலிருந்து தீ உருவாகி சுற்றாடலிலுள்ள பகுதியில் கடும் புகையினால் சூழப்பெற்றமையால் அச்சுற்றாடலில் வாழும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் புகையின் காரணமாக இருக்க முடியாது அவ்விடத்திலிருந்து உடன் வெளியேறிய துர்பாக்கிய நிலைமையும் இடம்பெற்றது.
இச்சம்பவத்தையிட்டு மன்னார் அனர்த்த முகாமைத்துவ பிரிவு பாதுகாப்பு படையினர் தீயணைக்கும் படையினர் மற்றும் மன்னார் நகர சபை தீ அணைப்பதில் தீவிரமாக செயற்பட்டதாகவும் தீயையை அணைத்தபோதும் இதனால் எற்பட்ட புகையில் இருந்து மக்கள் மீட்சிப்பெற நீண்ட நேரம் ஆனது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மன்னார் நகர சபை தவிசாளர் வசந்தனிடம் வினவியபோது முன்பு ஆரம்பக் காலத்தில் இந்த பகுதியிலேயே குப்பபைகள் கொட்டப்பட்டு அவைகள் எரிக்கப்பட்டு வந்தன.
பின்பு இப்பகுதியில் பாடசாலைகள் மக்கள் குடியேற்றம் மற்றும் பிராதான பாதையில் போக்குவரத்துக்கள் செய்தோருக்கு பெரும் அசௌரியங்கள் ஏற்பட்டமையால் இப்பகுதியில் குப்பைகள் கொட்டி எரிப்பது நிறுத்தப்பட்டு சேகரிக்கப்படும் குப்பைகள் மன்னார் பெரும்நிலப்பரப்பு பகுதியில் பாப்பாமோட்டை பகுதிக்கு எடுத்துச் சென்று கொட்டப்பட்டு வந்தன.
ஆனால் இதற்கு எதிராக சுற்று சூழல் தனியார் கம்பனி ஒன்று வழக்கு தாக்கல் செய்துள்ளமையால் அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவது தடைப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மன்னார் நகர் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டுவதற்கு தகுந்த இடத்தை அடையாளப்படுத்தி தரும்படி சம்பந்த உயர் மட்டங்களில் கோரிக்கைகள் முன்வைத்த போதும் பலன் கிடைக்காத நிலையில் சில தினங்கள் மன்னார் நகர சபை குப்பைகளை சேகரிப்பதை நிறுத்தி வைத்திருந்த நிலையிலேயே மீண்டும் இந்த இடத்தில் குப்பைகளை கொட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக என தெரிவித்தார்.
தவிசாளர் மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது கழிவுப் பொருட்களை தரம் பிரித்து எம்ஆர்எவ் திட்டத்திற்குள் அதாவது மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களைப் பிரித்தெடுக்கும் மையத்தை உருவாக்கி செயற்படுத்த எட்டுக் கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி திட்டத்தை முன்னெடுக்க ஒப்பந்தக்காரர்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்படுமாகில் இவ்வாறான தீ பிரச்சனை ஏற்படாது என நம்புகின்றோம்.
அத்துடன் வன இலாக மற்றும் வன விலங்கு பகுதியினர் இங்குள்ள காணிகளை கையடக்கப்படுத்தியுள்ளமையால் எமக்கு குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலை காணப்படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்டோர் இவர்களிடமிருந்து காணிகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியம் உண்டு என இவ்வாறு தெரிவித்தார்.


