மடு அன்னையின் ஆவணித் திருவிழாவுக்கு பக்தர்கள் அதிகரிப்பால் சேவைகள் விஸ்தரிக்க இரண்டாவது கலந்துரையாடலpல் தீர்மானம்.

(வாஸ் கூஞ்ஞ) 11.08.2026

எதிர்வரும் 15.08.2026 அன்று நடைபெறவுள்ள மடு அன்னையின் ஆவணித் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததைவிட பெருந் தொகையான பக்தர்கள் கொடியேற்றம் தொடக்கம் தற்பொழுது வரை வருகை தந்து கொண்டிருப்பதால் வருகை தருவோருக்கான அத்தியாவசிய தேவைகளை விரிவுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இது தொடர்பான இறுதி கட்ட கலந்துரையாடலpல் தெரிவிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (11.08.2026) காலை 11.30 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையின் பங்குபற்றலுடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்த்தமானி மடு பெருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் அத்தியாவசிய தேவைகளின் ஒழுங்கமைப்பு தொடர்பான இரண்டாவது மீளாய்வுக் கூட்டம் பகல் 1.30 மணி வரை இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. பி. கிறிஸ்து நேசரட்னம் அடிகளார்- மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்பணி. எஸ். ஜே. பெப்பி சோசை அடிகளார் மற்றும் மடு பிரதேச செயலாளர் ஆர்.சி. அமல்ராஜ்- திருவிழாவிற்கான தலைமைத்துவ பொறுப்புகள் வழங்கப்பட்ட அருட்பணியாளர்கள் ஆகியோருடன்

சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் கடற்படை இராணுவம் பொலிஸ் உயர் அதிகாரிகள் வைத்தியர்கள் என பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் இடம் பெற்று வருகின்றன. மேலும்இ 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனை வழிபாடு மாலை 6.00 மணிக்கும் அதனை தொடர்ந்து 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட மேன்மைதங்கிய ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இக் காலப்பகுதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை என்பதினாலும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் ஆவணி திருவிழாவிற்கு இப்பொழுதே அதிகமான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் ஏற்கனவே திட்டமிட்டதைவிட இம்முறை பல இலட்சக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு மேலும் வருகை தர உள்ளார்கள் என்பதன் அடிப்படையில் அனைத்து வித ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக சுகாதாரம்- மருத்துவம்- சாரணர் சேவை- ஜோன் ஆம்புலன்ஸ்- கழிவு அகற்றும் நடவடிக்கை- பாதுகாப்பு நடவடிக்கைகள்- குடிநீர் விநியோகம் மின்சாரம்- உணவு மற்றும் கடைகள்- போக்குவரத்து- சுற்று நீதிமன்றம் உள்ளிட்ட விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இது தொடர்பாக கடந்த முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக சகல திணைக்களங்களும் திருப்திகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என. இன்று (11.08) நடைபெற்ற இந்த மீளாய்வுக் கூட்டத்தில் திருப்திக் கொள்ளப்பட்டது

இருந்தபோதும் பத்தர்கள் தொகை அதிகரித்து அவர்கள் இருள்சூழ்ந்த பகுதிகளிலும் கூடாரங்கள் அமைத்து தங்கி வருவதால் அந்த இடங்களில் மின் ஒளியை விஸ்தரிக்க வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது. வேறு தேவைகளையும் வருகை தந்துக் கொண்டிருக்கும் பக்தர்களின் நலன் கருதி விஸ்தரிக்க கேட்டுக் கொண்டதிற்கு இணங்க இதன் போது கலந்து கொண்ட திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.