இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு

ஹஸ்பர் ஏ.எச்-
1. இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு, Intex Sri Lanka 2026 கண்காட்சியின் ஒரு பகுதியாக, Worldex India நிறுவனத்தினால், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவுடன் 2026 ஆகஸ்ட் 6ஆம் திகதி கொழும்பு BMICH-இல் ஏற்பாடு செய்யப்பட்டது. பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச ஜவுளி கொள்வனவு கண்காட்சியான Intex Sri Lanka 2026-இல் இந்தியாவின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்ததுடன், ஆடை உற்பத்தி துறையின் முழுமையான உற்பத்திச் சங்கிலியில் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் 80க்கும் மேற்பட்ட இந்திய கண்காட்சியாளர்கள், ஏற்றுமதி ஊக்குவிப்பு சபைகள் மற்றும் தொழில்துறை அமைப்புகள் பங்கேற்றன.

2. Intex Sri Lanka 2026-இல் இந்தியாவின் பங்கேற்பின் முக்கிய அம்சமாக “Incredible Textiles of India” என்ற சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டது. இந்திய ஆடை உற்பத்தி அமைச்சு மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் முன்னணி ஏற்றுமதி ஊக்குவிப்பு சபைகளான PDEXCIL, TEXPROCIL மற்றும் MATEXCIL உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவுடன் இந்த அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களும் இந்திய அரங்கிற்கு விஜயம் செய்து, பங்கேற்ற இந்திய கண்காட்சியாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

3. வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர் இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாட்டில் உரையாற்றினர். தமது உரைகளில், குறிப்பாக ஜவுளி மற்றும் ஆடைத் துறையில், இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் காணப்படும் வாய்ப்புகளை அவர்கள் எடுத்துரைத்தனர்.

4. இந்த மாநாட்டில் Joint Apparel Association Forum (JAAF) உள்ளிட்ட முக்கிய வர்த்தக சபைகளின் பிரதிநிதிகளும், முன்னணி வர்த்தக நிறுவனங்களும் பங்கேற்றனர். இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கையின் ஜவுளித் துறைகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பினருக்கு நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

5. இந்திய உயர்ஸ்தானிகர் தமது உரையில், இந்தியா–இலங்கை வர்த்தக கூட்டாண்மையின் வலிமையை எடுத்துரைத்ததுடன், ஜவுளித் துறையில் வலுவான விநியோகச் சங்கிலி தொடர்புகள் மற்றும் தொழில்துறைகளுக்கு இடையிலான கூட்டாண்மைகளை மேம்படுத்துவதன் மூலம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் விரிவுபடுத்துவதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.

6. ஜவுளி மற்றும் ஆடைத் துறை, இந்தியா–இலங்கை வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளின் முக்கிய தூண்களில் ஒன்றாகும். இந்தியா–இலங்கை ஜவுளி வர்த்தக மாநாடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராயவும் முக்கியமான தளமாக அமைந்தது.