(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) 01.08.2026
ஆவணி 15ந் திகதி நடைபெற இருக்கும் மன்னார் மறைமாவட்ட யாத்திரிகர் ஸ்தலமான மடு ஆலய பெருவிழாவுக்காக வருகை தரும் மக்களின் அடிபடைத் தேவைகள் மற்றும் ஆன்மீக விடயங்களும் தகுந்த விதத்தில் ஆய்த்தங்கள் செய்யப்பட்டுள்ளன. வருகை தரும் மக்கள் மடு ஆலய புனிதத் தன்மையை கடைப்பிடிக்கவும் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
வரலாற்று பகுழ்பெற்ற வர்தத்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு அன்னையின் வருடாந்த பெருவிழாவின் இரண்டாவது பெருவிழா எதிர்வரும் 06ந் திகிதி (06.;08) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ந் திகதி (15.08) மடு அன்னையின் விழாக் கொண்டாடப்பட இருப்பதையிட்டு இதற்கான கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றதைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
இவ்வருட ஆவணி மாதத்திற்கான மடுத் திருவிழாவுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இதன் முதற்கட்டமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் அனைத்து மாவட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உட்பட யாவருடனும் நீண்ட உரையாடல்கள் இடம்பெற்றது.
மடுத்திருப்பதிக்கு வருகின்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை எப்படியாக நிறைவேற்றுவது அவர்களுக்கான பாதுகாப்பை எவ்வாறு வழங்குவது சட்ட ஒழுங்குகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று இன்று வெள்ளிக்கிழமை (31.07) நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டமானது ஒவ்வொரு வருடமும் மக்கள் நலன் கருதி ஆடி மற்றும் ஆவணி பெருவிழாவுக்காக நடைபெறுவது வழக்கமாகும். இதற்கமைய இத்திருவிழாவை பொறுத்தமட்டில் எல்லாவித ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக ஆய்த்தங்கள் நடைபெற்றுக் கொள்ளப்படும் அதேவேளையில் மக்களின் ஆன்மீக தேவைகள் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட குருக்கள் மற்றும் ஏனைய குருக்களின் உதவிகளோடு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையிலும் அத்துடன் மடு பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளாரின் பொறுப்பில் இவ்விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
இவ்விழாவுக்காக வருகைத் தரும் மக்களின் கவனத்திற்கு சில விடயங்களை தெரிவிப்பதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
குறிப்பாக மடுத்திருத்தளத்திற்கு வருகை தருபவர்கள் புனிதத் தன்மையை கருத்தில் கொண்டு போதைப் பொருள் பாவனை மற்றும் மதுபாவனையை இங்கு முற்றாக தவிர்க்கும்படி அன்போடு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
இத்திருத்தலத்தின் புனிதத் தன்மையை பேணி பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகும். அத்துடன் இங்கு வருவோர் நாகரிகமான ஆடைகளை அணிந்து இந்த புனித பிரதேசத்தை மதிக்கும்படியும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
கடந்தகால விழாக்களின்போதும் நாங்கள் வலியுறுத்தியது போன்று இத்திருவிழா அன்று மக்கள் கூடுகின்ற இடமான ஆலய முன்றலில் திருவிழாவுக்கு முதல்நாள் வெஸ்பர் அன்று இரவு இந்த இடத்தில் மக்கள் தங்குவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
காரணம் அடுத்தநாள் காலை நடைபெறும் திருவிழாத் திருப்பலியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சுகாதார மற்றும் பல அசௌரியங்கள் எற்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இதில் தங்குவதற்குப் பதிலாக வேறு இடங்கள் தங்குவதற்கு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆலய வழிபாடுகள் பொறுத்தமட்டில் எதிர்வரும் ஆறாம் திகதி மாலை கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகின்றது. இதைத் தொடர்ந்து ஒன்பது நாட்களும் மாலை ஆறு மணிக்கு திருச்செபமாலையுடன் திருவழிபாடுகள் நடைபெறும். அத்துடன் வழமைபோன்று காலையில் தமிழிலும் சிங்களத்திலும் திருப்பலிகள் இடம்பெறும்
இதைத் தொடர்ந்து 14ந் திகதி மாலை ஆறு மணிக்கு திருச்செபமாலையுடன் வெஸ்பர் ஆராதானை நடைபெறும் இதன்போது நற்கருணை ஆராதனையும் நற்கருணை பவனியும் நடைபெறும்.
அடுத்த நாள் ஆவணி 15ந் திகதி காலை 6.15 மணிக்கு திருவிழாத் திருப்பலி இடம்பெறும் மன்னார் ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைத் தலைமையிலும் கொழும்பு பேராயர் மேதகு மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையிலும் இத்திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
யாவரும் இவ்விழாவுக்கு வருகைத் தந்து மடு அன்னையின் ஆசீரைப் பெற்றுச் செல்லும்படி ஒவ்வொருவரையும் அழைத்து நிற்கின்றோம் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.


