ஹஸ்பர் ஏ.எச்-
வியட்நாம் தூதரகம் மற்றும் Vietravel நிறுவனத்தின் அழைப்பின் பேரில் இன்று (30) நடைபெற்ற சிறப்பு சுற்றுலா நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் (TDHA) தலைவர் த குமார் ஜெயக்குமரன் தெரிவித்தார்.
2026 ஆகஸ்ட் 16 முதல் வியட்நாமிலிருந்து கொழும்பிற்கு நேரடி விமான சேவை ஆரம்பமாக இருப்பது, இலங்கையின் உள்வரும் சுற்றுலாத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இந்த புதிய விமான இணைப்பு, வியட்நாம் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, வர்த்தகம், கலாசார பரிமாற்றம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வின் போது, Vietravel நிறுவனத்தின் இயக்குநரை சந்தித்த குமார் ஜெயக்குமாரன், அந்நிறுவனத்தின் இலங்கை சுற்றுலா பயணத் திட்டங்களில் திருகோணமலையை முக்கிய சுற்றுலா தலமாக இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். உலகத் தரம் வாய்ந்த கடற்கரைகள், வரலாற்று மற்றும் கலாசார பாரம்பரியம், கடல்சார் சுற்றுலா, திமிங்கலக் காட்சிகள், நீர்மூழ்கிச் சுற்றுலா மற்றும் வளர்ந்து வரும் விருந்தோம்பல் துறை ஆகியவற்றின் மூலம் திருகோணமலைக்கு மிகப்பெரிய சுற்றுலா வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன என்பதை அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த திரு. குமார் ஜெயக்குமாரன்,
“வியட்நாம்–கொழும்பு நேரடி விமான சேவை ஆரம்பமாகுவது இலங்கை சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய முன்னேற்றமாகும். திருகோணமலை இலங்கையின் தனித்துவமான சுற்றுலா மையங்களில் ஒன்றாகும். இது வியட்நாம் மற்றும் உலகின் பல நாடுகளிலிருந்தும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திறன் கொண்டது. வியட்நாம் மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு சுற்றுலா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் புதிய சுற்றுலா மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்,” என்றார்.
இந்த புதிய விமான இணைப்பை திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் மனமார்ந்த வரவேற்பதுடன், விமான நிறுவனங்கள், சுற்றுலா முகவர்கள், அரசாங்க அமைப்புகள் மற்றும் அனைத்து சுற்றுலா பங்குதாரர்களுடனும் இணைந்து, திருகோணமலையை வியட்நாம் மற்றும் சர்வதேச சந்தைகளில் முன்னணி சுற்றுலா தலமாக மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது.


