(வாஸ் கூஞ்ஞ) 22.07.2026
சிறார்களை உருவாக்கி எடுப்பது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல எம் ஒவ்வொருவருக்கும் இவர்களை ஆன்மீகத்துடன் நல்ல விடயங்களை வளர்த்தெடுப்பது எமக்குள்ள பொறுப்பாகும் என இவ்வாறு மன்.பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய அதிபர் ஏ.ஏ.ஜே.ஆனந்தம் குரூஸ் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்கின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் சென்.மேரீஸ்- விக்றரிஸ் மற்றும் அமலதாசன் ஆகிய மூன்று முன்பள்ளிகளின் வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய முன்றலில் சனிக்கிழமை (18.07) மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு விஷேட அதிதியாகக் கலந்து கொண்ட மன்.பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய அதிபர் ஏ.ஏ.ஜே.ஆனந்தம் குரூஸ் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
மனித வாழ்க்கையில் ஒரு முக்கிமான படி நிலை இந்த முன்பள்ளி பருவம். உளவாளர்களின் கருத்தின்படி இந்த சிறார்களை வளர்ப்பது ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.
ஐந்து வயதில் குழந்தைகளின் மூளையில் என்பது வீதமான வளர்ச்சி காணப்படுகிறது. எவ்வாறு வீட்டுக்கு அத்திவாரம் முக்கியமாக காணப்படுகின்றதோ அவ்வாறு ஒரு மனிதனின் மூளை வளர்ச்சிக்கு இந்த சிறு பராயம் முக்கியமாக இருக்கின்றது.
இந்த முன்பள்ளி பருவமானது தங்களை அறியாமலே தங்களை வளர்த்துக் கொள்ளுகின்றனர். இவர்கள் எதிர்கால சிப்பிகளாக இந்த பிரதேசத்தில் இருக்கின்றார்கள்.
முன்பள்ளி என்பது எண்களையும் எழுத்துக்களையும் மனனம் செய்யும் இடமல்ல. மாறாக விளையாட்டுக்கள் மூலமாக பல்வேறுப்பட்ட விடயங்களை வளர்க்கும் பருவமாக இது இருக்கின்றது.
விளையாட்டு மூலமாகத்தான் இந்த பிள்ளைகள் கற்றல் செயற்பாட்டுக்கு உள்வாங்கப்படுகின்றனர். சிறார்களுக்கு நாம் விளையாட்டுக்களை நடாத்துவது வெற்றித் தோல்வியை தெரிந்து கொள்வதற்கு அல்ல இதன் மூலம் இச்சிறார்களுக்கு மறைமுகமாக பல பாடங்களை கற்றுக் கொடுக்கின்றோம்.
இவர்கள் சேர்ந்து விளையாடுவதன் மூலம் விழுந்து எழுந்து வீறுநடை போடும் சிறார்களாக இருக்கின்றனர். முன்பள்ளி ஆசிரியர்கள் தீயாகம் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். இந்த குழந்தை சிப்பிகளுக்கு தீபம் ஏற்றுபவர்கள்தான் இந்த முன்பள்ளி ஆசிரியர்கள். இங்கு எதை பெற்றுச் செல்லுகின்றார்களோ எதிர்காலத்தில் அவர்கள் சிறந்தவர்களாக மிளிர்வார்கள்.
இன்றைய நிகழ்வைப் பார்க்கும்போது இந்த முன்பள்ளி ஆசிரியர்களும் நிர்வாகமும் சிறந்த முறையில் ஆயத்தப்படுத்தியுள்ளதையிட்டு வியக்கின்றேன். ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல எம் ஒவ்வொருவருக்கும் இவர்களை ஆன்மீகத்துடன் நல்ல விடயங்களை வளர்த்தெடுப்பது எமக்குள்ள பொறுப்பாகும் என இவ்வாறு மன்.பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய அதிபர் ஏ.ஏ.ஜே.ஆனந்தம் குரூஸ் இவ்வாறு தெரிவித்தார்.


