( வாஸ் கூஞ்ஞ) 18.07.2026
மன்னார் விவசாயிகள் எதிர்கால காலநிலை மாற்றத்தை உணர்ந்து தங்கள் விவசாய நெற்செய்கையை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி சகிலா பானு மன்னார் மாவட்ட விவசாயக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நிலவ இருப்பதாக எதிர்வு கூறப்படும் எல்நினோ காலநிலையால் மன்னார் விவசாயிகளுக்கு அறிவு புகட்டும் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (15.07) விஷேட விவசாயக் குழுக்கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ச.சிவசிறீ- மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப்- முருங்கன் நெல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.திவ்யா- உயிலங்குளம் விவசாயத் திணைக்களம் பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.பிரியதர்சினி உட்பட பிரதேச செயலாளர்கள்- திணைக்களத் தலைவர்கள்- திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் விவசாய அமைப்புக்களிலிருந்து வருகை தந்திருந்த விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி சகிலா பானு கருத்து தெரிவிக்கையில்
மன்னார் மாவட்டத்தில் மிக குறைவான மழை வீழ்ச்சி கிடைப்தற்கான நிலை உருவாக இருக்கின்றது. தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள சிறுபோக காலத்தில் எமக்கு இது தொடர்பாக விளங்காது.
ஆனால் காலபோக காலத்தில் எமக்கு நன்கு தெரியவரும். ஓக்டோபர்- நவம்பர் மாதம் மன்னாரில் மழை அதிகம் பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அடுத்த சிறுபோகத்திற்கு எமக்கு மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றது.
நிலவப் போகின்ற எல்நினோ வழமையான எல்நினோ அல்ல. மாறாக இது வேறுபட்ட எல்நினோவாக காணப்படும். மன்னார் மாவட்ட ஈரலிப்பு கொண்ட மாவட்டம் அல்ல. நாம் வரட்சிக்குட்பட்ட மாவட்டம். இருந்தும் நாம் வரட்சிக்குரிய மாவட்டத்தில் இருந்தாலும் அதற்கேற்றவாறு நாம் விவசாயங்களை முன்னெடுத்துதான் வருகின்றோம்.
இருந்தும் இந்த காலநிலை மாற்றத்தைக் கொண்டு நாம் பெரிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. மாறாக சிறிய சிறிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்
அதாவது பயிர் செய்யும் காலத்தை நாம் மாற்று வேண்டும் என எமக்கு இப்பொழுது தெரியபடுத்தப்பட்டுள்ளது ஆகவே வழமையை கைவிட்டு ஒக்டோபர் 15ந் திகதிக்குப் பிறகுதான் விதைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் ஒக்டோபர் நவம்பர் காலத்தில் கடும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஒரு வருடத்திற்கு கிடைக்க வேண்டிய மழை ஒரு வாரத்திற்கள்ளேயே கிடைத்து விடும்.
ஆகவே மன்னார் விவசாயிகள் கமநல திணைக்களத்தின் அதிகாரிகளின் அறிவுரைகளைக் கேட்டு எதிர்காலத்தில் உங்கள் விவசாயத்தை மேற்கொள்வது சிறந்தது என மன்னார் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி சகீலா பானு இவ்வாறு தெரிவித்தார்.


