மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள், இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகரை இன்று மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்தித்து முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்புக் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் காணி, அபிவிருத்தி, வாழ்வாதாரம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் அரச காணி உரிமைப் பிரச்சினைகள், மகாவலி விரிவாக்கத் திட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களங்களின் எல்லை நிர்ணயங்கள், தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் காரணமாக உருவாகியுள்ள காணி உரிமைச் சிக்கல்கள் ஆகியவை குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களின் நில உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. ஜனநாயக அடிப்படையில் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெற வேண்டியதன் முக்கியத்துவம், மாகாண சபை முறைமையை வலுப்படுத்த வேண்டிய தேவை, அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதன் அவசியம் மற்றும் மக்களின் ஜனநாயக பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய முக்கியத்துவம் ஆகிய விடயங்களும் இதன்போது வலியுறுத்தப்பட்டன.
இலங்கை – நியூசிலாந்து இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடல் நடைபெற்றது. சர்வதேச அரங்குகளில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட விடயங்கள் விவாதிக்கப்படுகின்ற நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளை மையப்படுத்தி நடைபெறுவதால், மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகளை அந்தச் சந்தர்ப்பத்தில் முன்னிறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத் துறையில் காணப்படும் பெரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா முதலீடுகளை ஈர்ப்பதற்கும், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னுரிமைகள் மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப நியூசிலாந்து முதலீட்டாளர்களை இணைத்துச் செயல்படுவதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. விமானப் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் மாவட்டத்தின் சுற்றுலாப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
நியூசிலாந்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளின் ஊடாக மட்டக்களப்பில் பால் உற்பத்தியை அதிகரிப்பதுடன், பால் சார்ந்த தொழில்துறைகளை உருவாக்கி புதிய வேலைவாய்ப்புகளையும், உள்ளூர் மக்களுக்கான நிலையான வருமான வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள், அபிவிருத்தித் தேவைகள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நியூசிலாந்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன், எதிர்காலத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி மாவட்டத்தின் நிலையான வளர்ச்சிக்கான நடைமுறை முயற்சிகளை முன்னெடுக்க இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


