மேல் மாகாணத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் உச்சக் கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக, அவர்களைப் பராமரிக்கும் நடவடிக்கைகள் கடுமையான சிரமத்திற்கும் அபாயத்திற்கும் உள்ளாகியுள்ளதாக அதன் தற்காலிக பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.
நோயாளர்கள் அறிக்கைப்படுத்தப்படுவது இவ்வாறு அதிகரிப்பதன் காரணமாக, அதற்கு இணையாக வரும் நாட்களில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதிலும் இருந்து அறிக்கை செய்யப்பட்டுள்ள மொத்த டெங்கு நோயாளர்களான 59,638 பேரில் 52.4 சதவீதமானோர் மேல் மாகாணத்திலிருந்தே அறிக்கை செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் கபில கன்னங்கர மேலும் தெரிவித்தார்.
இதன் காரணமாக, மேல் மாகாணத்திற்குள் அதிகளவான நோயாளர்களைக் கொண்ட 22 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தப் பகுதிகளை மையமாகக் கொண்டு ஒரு வாரம் முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றைச் செயல்படுத்துவதற்குப் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வாரத்தின் இறுதியில் அதன் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதற்கமைய இந்த வேலைத்திட்டத்தை எதிர்காலத்திலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாக வைத்தியர் மேலும் கூறினார்.
தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால என மூன்று பகுதிகளாகத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகப் பணிப்பாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு மிகவும் பாரதூரமான மட்டத்தை எட்டியுள்ளதாலும், பெருமளவிலான வைத்தியசாலைகள் தங்களது உச்சக் கொள்ளளவை எட்டி வைத்தியசாலைத் தொகுதிக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும், இந்த நேரத்தில் குறுகிய கால அவசர நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.


