நாளை காரைதீவில் 36வது தியாகிகள் தின கிரிக்கெட் சுற்றுப் போட்டி

( வி.ரி. சகாதேவராஜா)

ஈழவிடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் போராளிகளின் ஞாபகார்த்தமான 36வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு,காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நாளை(21) ஞாயிற்றுக்கிழமை காரைதீவில் கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடாத்தவுள்ளது.

அந்த போட்டியின் இறுதி நிகழ்வு நாளை 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு, விபுலானந்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் தலைவர். வி. தயாபரன் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள், தோழர்கள்,
உறவினர்கள், நண்பர்கள், கழக நிர்வாக உறுப்பினர்கள், கழக அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.

இந்த நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு தியாகிகளின் தியாகங்களை நினைவுகூரும் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

நிகழ்வின் அனுசரணையை புலம் பெயர் வாழ் தோழர்கள் மேற்கொண்டுள்ளனர்.