எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில், கடல்சார் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட கற்கைநெறிகளை பூர்த்தி செய்த வாகரை பிரதேச மீனவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (19) வாகரை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலைய உதவி பணிப்பாளர் கே.அருள்சிவம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வாகரை பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த மீனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தினால் முதல் முறையாக வாகரை பிரதேச மீனவர்களுக்கான இவ்பயிற்சித் திட்டத்தின் கீழ் (Marine Chart Reading, Communication and Operation of Satellite Navigator) எனும் கற்கைநெறி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதையடுத்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பயிற்சியின் ஒரு பகுதியாக கடல்சார் வரைபட வாசிப்பு, கடல் வழிசெலுத்தல் குறியீடுகள் (Symbols), தொடர்பாடல் முறைகள் மற்றும் செயற்கைக்கோள் வழிகாட்டி (Satellite Navigator/GPS) பயன்பாடு உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
18 நாட்களாக இடம் பெற்ற கற்கை நெறியில் நவீன மற்றும் உயர்தர தொழில்நுட்ப உபகரணங்கள், கடல்சார் வழிகாட்டி கருவிகள் மற்றும் தொடர்பாடல் சாதனங்களை பாதுகாப்பாகவும் திறமையாக பயன்படுத்துவதற்கான அறிவும் நடைமுறைப் பயிற்சியும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் பயிற்சித்திட்டம், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலின் திறன் மற்றும் உற்பத்தித்திறனை உயர்த்துவதற்கும் பெரும் பங்களிப்பாக அமைவது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்கள அதிகாரிகள், இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் போதனாசிரியர்கள் வாகரை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இப் பிரதேச மீனவர்களுக்கு தேவையான
தொழில்சார் அபிவிருத்தி பயிற்சிகள் எதிர்காலத்தில் வழங்குவதற்கு இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் தயாராக உள்ளதாக பிராந்திய உதவி பணிப்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


