( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற இலங்கையின் மிகநீண்ட யாழ்ப்பாணம் – கதிர்காமம் பாதயாத்திரையானது 2021 இலிருந்து பண்டத்தரிப்பு பிரான்பற்றில் இருந்தே ஆரம்பமாகிறது. இது சந்நிதி நிருவாகத்திற்கு தெரியாதா?
இவ்வாறு கடந்த 14 வருடங்களாக பாதயாத்திரையில் ஈடுபட்டும், கடந்த ஏழு வருடங்கள் தலைமை தாங்கியும் , மூன்று மாகாணங்களையும் 7 மாவட்டங்களையும் 815 கிலோமீட்டர் தூரம் 58 நாட்களில் கடந்து வழிநடாத்தி வருகின்ற பாதயாத்திரைக்குழுத் தலைவருமான ஜெயா வேல்சாமி, பளையில் இருந்து தெரிவித்தார்.
இம் முறை பாதயாத்திரை முதல் நாள் பயணத்தின் போது அங்கே குழப்பம் ஏற்பட்டு இருந்தது .
அதனால் காலை 9:00 மணிக்கு புறப்பட வேண்டிய பாதயாத்திரை 12:00 மணியளவில்தான் அங்கிருந்து புறப்பட நேர்ந்தமை தெரிந்ததே.
இதற்கு காரணம் காலா காலமாக சந்நிதி ஆலயத்தில் மூலஸ்தானத்தில் பாதயாத்திரையில் கொண்டு செல்லும் அனைத்து வேல்களையும் வைத்து பூஜை முடிந்த பிற்பாடு பூசகர் சுவாமிகளிடம் ஒப்படைப்பது வழமை. ஆனால் இம்முறை
மூலஸ்தானத்தில் பிரதான வேல் வைக்கப்படவில்லை என்பதுதான்.
அதற்கு சந்நிதி நிர்வாகம் பதில் அளிக்கையில் ..
கால காலமாக சந்நிதியில் இருந்து யாழ் – கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பிப்பது வழக்கம். ஆனால், இம்முறை அவர்கள் வழமைக்கு மாறாக பிரான் பற்றில் இருந்து ஆரம்பித்து இரண்டு, மூன்று ஆலயங்களில் அந்த வேலை வைத்து இங்கு கொண்டு வந்தார்கள். அப்படிப்பட்ட வேலை நாங்கள் எப்படி எமது மூலஸ்தானத்தில் வைப்பது? இந்த வரலாற்றை மாற்றியது அவர்களே தவிர நாங்கள் அல்ல என்று கூறி இருந்தார்கள் .
அதற்கு பதிலளித்த பாதயாத்திரைக் குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி பதிலளிக்கையில்..
இந்த பாதயாத்திரை இம்முறை மட்டும் அல்ல, கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்தே பிரான்பற்றிலிருந்து ஆரம்பமாகி நடந்து வருகின்றது. துரைச்சாமி என்கின்ற அடியாரின் வேண்டுகோளுக்கு இணங்க 2001 ஆம் ஆண்டு அங்கு நாங்கள் அனைவரும் சென்று எமது குருசாமி வேல்ச்சாமி அந்த வேலை மூலஸ்தானத்தில் வைத்து வலம் வந்து என்னிடம் ஒப்படைத்தார்.
அன்றிலிருந்து இன்று வரை அங்கிருந்து தான் இந்த பாதயாத்திரை தொடங்குவது வழக்கம். அன்றிலிருந்து கடந்த ஆறு வருடங்களாக அங்கிருந்தே பாதயாத்திரை இடம்பெற்று வருகிறது.
சரி . எமது பிரதான வேலை சந்நிதி மூலஸ்தானத்தில் வைக்க முடியாது என்றால் எவ்வாறு ஏனைய சின்ன வேல்களை வைக்க முடியும் ?
அதை எவ்வாறு அனுமதித்தார்கள்? சரி ஏன் அதை திரும்பி அந்த சுவாமிகளிடம் ஒப்படைக்கவில்லை. இவையெல்லாம் கேள்விகள் .அதை சன்னதி நிர்வாகம் தவறை ஒப்புக் கொள்ள வேண்டுமே தவிர தவறை நியாயப்படுத்த கூடாது என்றார்.
இதேவேளை, பாதயாத்திரையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மட்டக்களப்பைச் சேர்ந்த சாந்தி அம்மா கூறுகையில்..
நான் கடந்த 18 வருடங்களாக யாழ்ப்பாணத்தில் இருந்து பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகின்றேன். முருகப்பெருமான் இந்த வேல்தாங்கி முதலில் பற்றிக் ஹரிகன் பின்னர் வேல்சாமி தற்போது ஜெயாவேல்சாமி ஆகியோர்களின் தலைமையிலே நான் வந்திருக்கின்றேன்.
2021 ஆம் ஆண்டு தொடக்கம் பண்டத்தரிப்பு பிரான்பற்றில் இருந்து தான் இந்த வேல் யாத்திரை ஆரம்பமாகிறது. காரணம் அங்குள்ளவர்கள் விடுத்த அன்பான வேண்டுகோள். எனவே சன்னிதி – கதிர்காமம் பாதயாத்திரை இம்முறை மட்டும் அல்ல.கடந்த ஆறு வருடங்களாக அங்கிருந்து தான் ஆரம்பிக்கின்றோம். சந்நதி நிருவாகம் பொய் சொல்லக்கூடாது.
என்றார்.
வரன் சாமி கூறுகையில் ..
சந்நிதியில் இருந்து புறப்படும் அன்று வழமையாக காலை ஆகாரம் எங்களுக்கு காலகாலமாக தருவது கலாநிதி மோகன் சாமி தான் .
அது மாத்திரமல்ல அவர் வழி நெடுகிலும் யாழ்ப்பாணம் தொடக்கம் உகந்தை குமுக்கன் வரை அவர் இடையிடையே வந்து எமக்கு உரிய அத்தனை தேவையான உணவு பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களையும் வழங்குவார். அப்படிப்பட்ட மகா மனிதர் அவரது ஆகாரத்தை உண்டு தான் நாங்கள் புறப்படுவது வழமை. நாம் சன்னதியில் உண்பதில்லை என்றார்.
பண்டத்தரிப்பைச் சேர்ந்த துரைசாமி சாமியார் கூறுகையில் ..
ஒரு வகையில் அடியேனின் வேண்டுகோளுக்கிணங்க இந்த பாதயாத்திரை பிரான்பற்றில் இருந்து 2021 இல் ஆரம்பமாகியது. எனினும் நாம் முறைப்படி சந்நிதியில் இருந்துதான் பிரதானமான பாதயாத்திரை பூரணமாக ஆரம்பமாகும் என்பது அனைவருக்கும் தெரியும் .
நிலமை இப்படி இருக்க இவர்கள் உண்மைக்கு புறம்பாக எங்களை குற்றச்சாட்டுவது அபத்தமானது.எமக்கு அங்கு இருட்டடிப்பு செய்யப்பட்டது. கதவடைப்பு செய்யப்பட்டது. இனியாவது அவர்கள் உண்மை சொல்ல வேண்டும் என்றார்.


