யூ.கே.காலித்தீன் –
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேதினமானது வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெருந்திரலான தொழிலாளர்கள், வர்த்தக சங்கத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் முன்றலிருந்து ஆரம்பமான நிகழ்வானது மாட்டு வண்டி சவாரியுடன் ஆரம்பமான நிகழ்வானது சாய்ந்தமருது முபாறக் காடன் முன்பாக வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம். முபாறக் அவர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதோடு சங்கத்தின் கொடியினை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எம். முஹம்மட்டினால் ஏற்றிவைக்கப்பட்ட நிகழ்வில் சங்கத்தின் தலைவர் முபாறக் உரையாற்றுகையில் உலகம் முழுவதும் உழைப்பின் மேன்மையை உரக்கச் சொல்லும் நாள் இன்று ஆனால், இன்று சாய்ந்தமருதில் நாம் கூடியிருப்பது வெறும் சடங்கிற்காக அல்ல முதலாளி – தொழிலாளி என்ற உறவைத் தாண்டி, ‘நமது ஊர், நமது வர்த்தகம், நமது வளர்ச்சி’ என்ற உன்னத நோக்கத்திற்காக.
உழைப்பின் புனிதமும் வரலாறும், நண்பர்களே, வரலாறு என்பது இரத்தத்தால் எழுதப்பட்டது. சிகாகோவில் அன்று சிந்திய இரத்தம் தான், இன்று நாம் அனுபவிக்கும் ‘எட்டு மணி நேர வேலை’ என்ற அடிப்படை உரிமையை பெற்றுத் தந்தது.
ஆனால், ஆன்மீக ரீதியாகப் பார்த்தால், உழைப்பாளியின் கண்ணியத்தை உலகம் உணரச் செய்தவன் இறைவன். “ஒரு தொழிலாளியின் வியர்வை காய்வதற்கு முன்னரே அவனது கூலியைக் கொடுத்துவிடுங்கள்” என்று எமது உயிரிலும் மேலான கண்மனி நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கு, இன்று உலகத் தொழிலாளர் சட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.
சாய்ந்தமருது மண்ணின் வர்த்தகப் பாரம்பரியம்:
சாய்ந்தமருது என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல, அது ஒரு வர்த்தகக் கோட்டை. அம்பாறை மாவட்டத்தின் பொருளாதார இதயத் துடிப்பு இங்கேதான் இருக்கிறது. நமது மூதாதையர்கள் வெறும் பணத்திற்காக மட்டும் தொழில் செய்யவில்லை; நேர்மைக்காகவும், நாணயத்திற்காகவும் தொழில் செய்தார்கள். அந்தப் பாரம்பரியத்தை இன்று சுமந்து நிற்கும் வர்த்தகப் பெருமக்களே, உங்களின் வெற்றிக்கு பின்னால் நிற்பது யார்? உங்களின் கடைகளில், நிறுவனங்களில் காலையும் மாலையும் அயராது உழைக்கும் உங்கள் பணியாளர்கள் தான்.
பணியாளர்களே, நீங்கள் ஒரு கடையின் கதவைத் திறக்கும் போது, அது வெறும் கடையல்ல, அது பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தைத் திறக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
இன்றைய பொருளாதாரச் சூழலும், கூட்டுப் பொறுப்பும்
இலங்கையின் இன்றைய பொருளாதாரச் சூழல் சவாலானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். விலைவாசி உயர்வு, மின்சாரக் கட்டணம், இறக்குமதி சிக்கல்கள் என வர்த்தகர்கள் ஒரு பக்கம் திணறுகிறார்கள். மறுபக்கம், வாங்கும் சம்பளம் போதுமானதாக இல்லையே என்ற கவலையில் பணியாளர்கள் இருக்கிறார்கள்.
இந்த இக்கட்டான நேரத்தில் நாம் ஒருவருக்கொருவர் முரண்படக் கூடாது. வர்த்தகர்கள் தங்கள் பணியாளர்களை வேலையாட்கள் என்று பார்க்காமல், தங்கள் குடும்ப உறுப்பினர்களாக பார்க்க வேண்டும். பணியாளர்கள் இந்த நிறுவனத்தை யாரோ ஒருவருடையது என்று நினைக்காமல், எனது வாழ்வாதாரம் தரும் எனது நிறுவனம் என்று எண்ணி உழைக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் லாபம் என்பது முதலாளிக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அது தொழிலாளியின் வாழ்விலும் பிரதிபலிக்க வேண்டும்.
வர்த்தக சங்கத்தின் கடமை:
சாய்ந்தமருது வர்த்தக சங்கம் இன்று இந்த விழாவை ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுக்குரியது. வர்த்தக சங்கம் என்பது வெறும் வர்த்தகர்களின் லாபத்தைப் பாதுகாக்கும் அமைப்பு மட்டுமல்ல; அது தொழிலாளர்களின் நலனையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் ஒரு பாலமாக இருக்க வேண்டும். பணியாளர்களுக்கான மருத்துவ உதவிகள், அவசரகால நிதித் தேவைகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க இந்த சங்கம் முன்வர வேண்டும்.
நவீன காலத்தின் சவால்
இன்று உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஆன்லைன் வர்த்தகம் நம் வாசற்படிக்கு வந்துவிட்டது. இந்தச் சூழலில் சாய்ந்தமருது வர்த்தகம் நிலைத்து நிற்க வேண்டுமானால், உரிமையாளர்களும் பணியாளர்களும் இணைந்து புதிய தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டும். வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்பதும், அவர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதும் தான் எத்தகைய ஆன்லைன் வர்த்தகத்தையும் நாம் வெல்ல உதவும் ஆயுதங்கள்.
உழைப்பாளர் இன்றி உலகு இல்லை வர்த்தகம் இன்றிப் பொருளாதாரம் இல்லை. கையும் நகமும் போல நாம் இணைந்து செயல்படுவோம்.
முதலாளிகள் கனிவோடும், தொழிலாளர்கள் அர்ப்பணிப்போடும் இருந்தால் சாய்ந்தமருது மண்ணின் வர்த்தகம் இலங்கையிலேயே முதன்மை இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. உழைப்பைப் போற்றுவோம்! உழைப்பாளர் உரிமையைக் காப்போம்!
வாழ்க சாய்ந்தமருது வர்த்தகம்! வளர்க உழைப்பாளர் வாழ்வு என்று தனது மேதின நிகழ்வின் உரையில் கூறி முடித்தார்.
அதன் பின்னர் தொழிலாளருடன் இணைந்து கடலில் வோட் சவாரியும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


