பல்கலைக்கழகத்தில் 20 பேரை கடித்த ஒற்றை அணில் !

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில், ஒற்றை அணிலின் தாக்குதலால் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ராஜஸ்தான், உதய்ப்பூரில் (Udaipur) அமைந்துள்ள குறித்த பல்கலைக்கழகத்தில் கடந்த 6 வார காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 20 பேரை இந்த அணில் கடித்துக் குதறியுள்ளது. பொதுவாக சாதுவான பிராணியாகக் கருதப்படும் அணில், இவ்வாறு மனிதர்களைத் துரத்தித் துரத்திக் கடிப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பல்கலைக்கழகத்தின் உளவியல் (Psychology) துறைக்குச் செல்லும் பாதையில் இந்த அணில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமலேயே, அந்த வழியாகச் செல்பவர்களைத் திடீரெனத் தாக்கி கடிப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த ‘வெறிப்பிடித்த’ அணிலின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

வனத்துறையினரின் உதவியுடன் ஆங்காங்கே கூண்டுகள் வைக்கப்பட்டு அணிலை உயிருடன் பிடிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அணில் பிடிபடும் வரை அந்தப் பாதையைப் பயன்படுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.