வாகரைப் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு..

வாகரைப் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு
வாகரைப் பிரதேசத்தில், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு இன்று முன்வைக்கப்பட்டது.

இந்த முன்மொழிவு, கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச சபை உபதவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் தீர்மானமாக எடுக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கருத்து தெரிவிக்கையில்,

“வாகரைப் பிரதேச சபை வருமானம் குறைவாகக் கிடைக்கும் ஒரு சபையாக இருந்தாலும், பல்வேறு வளங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க மத்திய அரசின் நிதி ஆதரவைப் பெறுவதற்கான வழிகளைத் தேட வேண்டும்.

ஆனால் தற்போது, வாகரைப் பிரதேசத்தில் வீதிகளைப் புனரமைக்கவும், வீதி விளக்குகள் அமைக்கவும், மேலும் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தேவையான நிதி இல்லை. இதேவேளை, நாட்டில் பெருமளவில் நிதி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. டீசல் மற்றும் நிலக்கரி இறக்குமதிகளில் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குறைந்த வருமானம் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கான அபிவிருத்தி நிதி ஏன் இல்லை என்பது கேள்விக்குறியாகிறது. காணாமல் போனது மக்களின் வரிப்பணமே. அரசாங்கத்தின் அலட்சியமே இந்நிலைக்கு காரணமாக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் நாட்டை மேலும் வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்லும் அபாயம் உள்ளது.

எங்களின் நிலைப்பாடு அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றுவது அல்ல. ஆனால், இந்த அரசாங்கம் திருந்தி மக்களுக்கு உரிய சேவைகளை வழங்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு,” என தெரிவித்தார்.

இச்சந்திப்பு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற விவகாரங்களுக்கு பொறுப்பான முன்னாள் மாநகர முதல்வர் தி. சரவணபவான் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில், கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் பிரதித்தவிசாளர், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதேச கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், வட்டார மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவது தொடர்பிலும், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது