மட்டக்களப்பில்  காணி இழந்த கிழக்கு மக்களின் மாநாடு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தங்களது குடியிருப்பு, ஜீவனோபாய மற்றும் மத வழிபாட்டு இடங்கள் அரசின் 7 வகையான பொறி முறைகள் ஊடாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இக்காணிகளை மீளவும் பெற்றுக்கொள்வதற்கு காணியை இழந்த மக்கள் பல ஆண்டு காலமாக முயற்சித்து வருகின்றனர். ஆனால் இன்றுவரை தங்களுக்கான காணிகள் விடுவிக்கப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில் இன்றைய தினம்(23.04.2026) கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் காணிகளை இழந்த மக்கள் தங்களது காணிகளை இலங்கை அரசு மீள வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சர்வோதைய மண்டபத்தில் ஒன்று கூடி தாங்கள் எதிர்நோக்கும் காணி தொடர்பான பிரச்சினைகளை முன் வைத்தத்துடன், இலங்கை ஜனாதிபதிக்கு இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய இணைப்பாளர் ஊடாக மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.

இம் மாநாடானது அகம் மனிதாபிமான வள நிலையம் மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் காணி இழந்த மக்களின் குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் கலாச்சார உரிமைகளை மீளப் பெற்றுத்தர வேண்டுகோள் என்ற தலைப்பில் ஜனாதிபதி அனுப்பிவைக்கப்பட்டுள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் கிழக்கு மாகாணமான திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் கலாச்சார அடையாளங்களுக்குரிய நிலங்களை இழந்த நாங்கள், எமது அடிப்படை உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த மரியாதையுடனான வேண்டுகோளை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

2026 மார்ச் 23 ஆம் திகதி திருகோணமலையில் “காணி வாரம்” எனும் மக்கள் விழிப்புணர்வு செயற்றிட்டத்தைத் தொடங்கிய நாங்கள், ஒரு வார காலம் முழுவதும் கிழக்கு மாகாணம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் உரிமை கோரல் பிரச்சாரங்களை முன்னெடுத்தோம். இச்செயற்பாடுகளின் நிறைவாக, 23.04.2026 அன்று மட்டக்களப்பில் அமைந்துள்ள சர்வோதயா ஒன்று கூடல் மண்டபத்தில் காணி உரிமையாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புகள், பெண்கள் வலையமைப்புகள் மற்றும் காணி மீட்பிற்கான பிராந்திய வலையமைப்புகள் ஒன்றுகூடி, இந்த கூட்டு வேண்டுகோளை தங்களுக்கு அனுப்புகின்றோம்.

இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுற்ற பின்னரும், பெருமளவு மக்கள் தங்களது சொந்த நிலங்களுக்கான சட்டபூர்வ ஆவணங்களைப் பெற முடியாமல் இன்னும் சிக்கலில் உள்ளனர். மேலும், அரசின் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள், தனிநபர் மற்றும் நிறுவன தலையீடுகள் ஆகியவற்றின் மூலம் குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் மத கலாச்சார இடங்கள் சட்டரீதியாகவும் சட்டமுறையற்றும் அபகரிக்கப்பட்டுள்ளன என்பதும் கவலையளிக்கிறது.

குறிப்பாக, கீழ்க்காணும் வகைகளின் கீழ் நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதை நாம் பதிவு செய்கிறோம்:

தொல்லியல் பகுதிகள், பாதுகாப்பு வலயங்கள், வனவளப் பகுதிகள், பூஜா நிலங்கள்,  வனவிலங்கு பாதுகாப்புப் பகுதிகள், அபிவிருத்தித் திட்டங்கள், சுற்றுலா பிரதேசங்கள்.

இந்த நடவடிக்கைகள் பல சந்தர்ப்பங்களில் மக்கள் இடம்பெயர்வு, வறுமை, வாழ்வாதார இழப்பு மற்றும் சமூக அடையாள சிதைவு போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

எமது நிலங்களை மீளப் பெறுவதற்காக நாங்கள் பல்வேறு ஜனநாயக மற்றும் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அதில், அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள், அரசியல் பிரதிநிதிகளுடன் சந்திப்புகள், அமைதியான போராட்டங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரல்கள், மற்றும் சர்வதேச சமூகத்துடன் தொடர்புகள் ஆகியவை அடங்கும். இருப்பினும், இதுவரை நிலையான மற்றும் முழுமையான தீர்வு எமக்கு கிடைக்கவில்லை.

மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்களே,

இலங்கை அரசின் தலைவராகிய தாங்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காணிகளை இழந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை வகிக்கின்றீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்.

எனவே, எங்களது பணிவான வேண்டுகோள்கள் வருமாறு:

காணி இழந்த மக்களின் நிலங்களை அடையாளம் கண்டு விரைவான மீளளிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

இதுவரை ஆவணங்கள் இன்றி பல ஆண்டுகளாக குடியிருக்கும் காணிகளுக்கு சட்டபூர்வ ஆவணங்களை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளல்.

அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்தல்.

காணி இழந்துள்ள மக்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

மத மற்றும் கலாச்சார உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல்.

நாங்கள் எங்களது சொந்த நிலங்களில் கண்ணியத்துடன், பாதுகாப்புடன் மற்றும் எங்களது அடையாளங்களுடன் வாழ விரும்புகிறோம்.

எமது வேண்டுகோளை கருணையுடன் பரிசீலித்து, நீதியும் சமத்துவமும் நிலைநிறுத்தும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.