(சுமன்)
தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் தியாகத்தினை நினைவு கூரும் முகமாகவும், அவரின் தியகத்தினை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் முகமாகவும் அன்னாரின் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் தாயக செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த நினைவேந்தலின் பிரதான நிகழ்வு இன்றைய தினம் (19) மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தில் தாயக செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
தாயக செயலணியின் மட்டக்களப்பு இணைப்பாளர் இருதயம் செல்வகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை.தினேஸ் உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், அன்னை பூபதியின் குடும்ப உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அன்னை பூபதிக்கான திதிக் கடமைகள் குடும்ப உறவுகளால் முன்னெடுக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அன்னை பூபதிக்கான அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அன்னையின் இளைய மகள் ராதா அவர்களினால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதுடன், அன்னையின் மூத்தமகள் சாந்தி அவர்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகை தந்தவர்களினால் சுடரேற்றி, மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தேச விடுதலைக்கான அன்னையின் தியாகம் உள்ளிட்ட தமிழர் போராட்ட வரலாற்றினை எதிர்கால சந்ததிக்குக் கடத்தும் முகமாக அஞ்சலி உரைகள் இடம்பெற்றதுடன், அன்னையின் நினைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசில்கல் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதியின் நினைவேந்தலை சிறப்பிக்கும் முகமாக தாயக செயலணியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாவட்டங்களில்
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கவிதை, பேச்சு, கட்டுரை போன்ற கல்விசார் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்புற மேற்கொள்ளப்பட்டது.
அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் மற்றும் வாகரை பிரதேசங்களில் குறித்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.
கடந்த 06.04.2026ம் திகதி கிரான் விளையாட்டு மைதானத்தில் குறித்த பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கழகங்களை மையமாகக் கொண்டு பெண்களுக்கான மரதன், பெண்கள் விளையாட்டு நிகழ்வுகள், ஓட்டப் போட்டி நிகழ்வுகள், பெண்களுக்கான கயிறிழுத்தல், பெண்களுக்கான எல்லை விளையாட்டு மற்றும் ஆண்களுக்கான கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் என்பன முன்னெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வாகரைப் பிரதேசத்தில் கடந்த 15.04.2026 மற்றும் 18.04.2026 ம் திகதிகளில் ஆண் பெண் இருபாலருக்குமான கலப்பு எல்லை விளையாட்டு, ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டிகள், சிறுவர் விளையாட்டுகள், கயிறுழுத்தல், சிறுவர்களுக்கான கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் என்பன நடாத்தப்பட்டன. குறித்த விளையாட்டுப் போட்டிகளில் சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த போட்டிகளின் முக்கிய விளையாட்டுகளுக்கான பரிசில்கள் இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அன்னை பூபதியின் திருவுருவப் படம் ஏந்திய வாகன பேரணி 11ம் நாளான இன்று அன்னை உண்ணா விரதம் ஆரம்பித்த மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வுடன் தனது பயணத்தை ஆரம்பித்து நாவலடியின் அன்னையின் நினைவேந்தல் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்து குறித்த நிகழ்வுடன் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
தேச விடுதலைக்காக தன் இன்னுயிரைத் தியாகம் செய்த அன்னைக்கு நன்றி செலுத்தும் முகமாகவும், அன்னையின் தியாக வரலாற்றையும், இனத்தின் விடுதலைக்கான போராட்ட வரலாற்றையும் அடுத்த சந்ததிக்குக் கொண்டு சேர்க்கும் முகமாக நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பொதுமக்கள் மிக உணர்வுடன் கலந்து கொண்டு அன்னைக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.


