அமெரிக்கா ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணித்து, அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் இராஜதந்திர முயற்சிகள் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன.

பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இந்த வாரம் சவுதி அரேபியா மற்றும் துருக்கிக்குச் சென்று, அங்குள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் மேற்கொண்டு வரும் இந்த அமைதி முயற்சிகள் குறித்து ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரிக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய இரண்டு வார கால போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி, நிரந்தரத் தீர்வொன்றைப் பெற அமெரிக்கா மற்றும் ஈரானுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

புதிய பேச்சுவார்த்தைகள் எங்கு நடைபெறும் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் அல்லது சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஆகிய நகரங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

நியூயோர்க் போஸ்ட் இதழுக்கு வழங்கிய நேர்காணலில், அடுத்த இரண்டு நாட்களில் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனிரின் செயல்பாடுகளையும் அவர் பாராட்டியுள்ளார்.

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற 21 மணிநேரப் பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் இன்றி நிறைவடைந்திருந்தது.

இந்நிலையில் போர்நிறுத்தம் அமுலில் இருந்தாலும், ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க இராணுவம் சுற்றி வளைத்துள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் உலக சந்தையில் எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.

தற்போது போர்நிறுத்தம் அமுலில் இருப்பதும், அமெரிக்கா – ஈரான் இடையே தொடர்பாடல் வழிகள் திறந்திருப்பதும் சாதகமான விடயங்கள் என இராஜதந்திர ஆய்வாளர்கள் கருதுவதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.