தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தும் விதமாக தொல்பொருள் திணிக்களத்தினால் நிறுவப்பட்ட வழிகாட்டிப் பதாதைகளை கடந்த நவம்பர் 23ம் திகதி வாழைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் அகற்றியமை தொடர்பில் தவிசாளர் உள்ளிட்ட ஐவர் மீது தொல்பொருள் திணைக்களத்தின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசாரால் கடந்த நவம்பர் 25ம் திகதி வாழைச்சேனை நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கில் உரிய பிரதிவாதிகளுக்குப் பிணை வழங்கப்பட்டு இன்றைய தினம் (2025.12.15) குறித்த வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது பொலிசாரால் மேலதிக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு எதிர்வரும் மாசி மாதம் 09ம் திகதிக்கு மாற்றப்பட்டது.
சட்டத்தரணிகளான விஜயகுமார் மற்றும் ஹபீப் றிபான் ஆகியோர் பிரதிவாதிகள் சார்பில் இன்றைய தினம் ஆஜாராகியிருந்தனர்.
இது தொடர்பில் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவிக்கையில்,
குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டன. பொலிசாரினால் வழக்கு தொடர்பான மேலதிக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது குறித்த பதாதை நடப்படுவது தொடர்பில் வினவப்பட்டது. இதன் போது குறித்த தொல்லியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கடிதங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீள கடிதமொன்று வழங்குமாறும், அக்கடிதத்தை சபையில் சமர்ப்பித்து சபையினால் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தைத் தொடர்ந்து மன்றுக்கு அறிவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மாசி மாதம் 09ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.


