காத்மண்டுவில் 7வது மாண்புடன் கூடிய மாதவிடாய் குறித்த சர்வதேச கற்றல் மாநாடு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாள் செயல்பாட்டின் 14வது நாளான டிசம்பர் 8 ஆம் திகதி ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும்  மாண்புடன்கூடிய மாதவிடாய் தினத்தைக் குறிக்கும் வகையில், 7வது சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் குறித்த மூன்று நாள் சர்வதேச கற்றல் மாநாடு திங்கட்கிழமை (08) நேபாளத்தின் காத்மண்டுவில் தொடங்கியது.

இந்த நிகழ்வு “மாண்புடன் கூடிய மாதவிடாய்: உள்ளார்ந்த கண்ணியம், சமத்துவம் மற்றும் பிரிக்க முடியாத உரிமைகளை மீட்டெடுங்கள்” என்ற கருப்பொருளில் நடத்தப்படுகிறது.

மாண்புடன் கூடிய மாதவிடாய்க்கான உலகளாவிய தெற்கு கூட்டணி மற்றும் ராதா பவுடல் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் 21 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், இளைஞர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் உட்பட 140க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நேபாளத்தின் தேசிய இளைஞர் மன்றம், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் மென்எங்கேஜ் அலையன்ஸ் (குளோபல்) ஆகியவை இந்த நிகழ்வின் இணை கூட்டாளிகளாக உள்ளன. இதில் விளக்கக்காட்சிகள், குழு விவாதங்கள், முழுமையான அமர்வுகள், மூலோபாய பட்டறைகள் மற்றும் புத்தக வெளியீடுகள், ஆராய்ச்சிகள், பாடல்கள் மற்றும் நாடக நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் 13 கருப்பொருள்களில் அமர்வுகள் இடம்பெறுகின்றன.

நேபாளத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஜெகதீஷ் கரேல் மாநாட்டில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பெனின், பூட்டான், பல்கேரியா, கமரூன், கொங்கோ, பிரான்ஸ், ஜெர்மனி, கினியா, இந்தியா, இத்தாலி, ஐவரி கோஸ்ட், மெக்சிகோ, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், ஸ்பெயின், டோகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாண்புடன் கூடிய மாதவிடாய் ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு  தொடங்கி வைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.