வெள்ளத்திற்கான எதிர்வினை வேலைத்திட்டத்தை கம்பஹாவில் ஆரம்பித்தது அம்கோர் நிறுவனம்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பைத் தலைமையகமாகக் கொண்டு பல்வேறு மனிதாபிமானப் பணிகளை நாடு முழுவதும் முன்னெடுத்து வரும் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனம் அம்கோரினால் டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹா மாவட்ட மக்களுக்கு ஆதரவாக ஒரு மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவுடனும், கம்பஹா மாவட்ட செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒருங்கிணைப்புடன், இந்த வெள்ள நிவாரண மற்றும் புனர்வாழ்வு திட்டம் 06-12-2025 கம்பஹா பிரதேச செயலகப் பிரிவில், கோணகஹ-1 கிராம உத்தியோகத்தர் பிரிவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது நியூசிலாந்து பிரதி உயர்ஸ்தானிகர் கேப்ரியேல் ஐசாக், அம்கோர் நிறுவன தேசியப் பணிப்பாளர் ப. முரளிதரன், அம்கோர் நிறுவன நிதிப் பணிப்பாளர் துமிந்த பெரேரா, கம்பஹா பிரதேச செயலாளர் திருமதி நாதீஷானி அமரசிங்க, கோணகஹ–1 கிராம சேவைகள் உத்தியோகத்தர் M.D.A.K. மினிதந்திரி, AMCOR குழுவினரும் நியூசிலாந்து உயர் ஆணைய அதிகாரிகளும் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.

2020 ஆண்டு கொரோனா காலத்திலும் கம்பஹா மாவட்டத்தில் பல்வேறு பிரதேச செயலக பிரிவுகளில் அம்கோர் நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.