மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு வயது 15

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 2010ஆம் ஆண்டு உப கல்வி வலயமாக ஆரம்பிக்கப்பட்டது. 2011இல் கல்வி வலயமாக உயர்வுபெற்றது. மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு நகரில் இருந்து 9கிலோமீற்றர் தொலைவில் குறிஞ்சாமுனை கிராமத்தில் இதன் அலுவலகம் அமைந்துள்ளது.

68பாடசாலைகளை கொண்டுள்ளது. மண்முனை மேற்கு, ஏறாவூர்பற்று, மண்முனை தென்மேற்கு ஆகிய மூன்று கோட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இவ்வலயத்தில் ஐந்து, 1ஏவீ பாடசாலைகளும், 13, 1சீ பாடசாலைகளும் 16, வகை 2 பாடசாலைகளும் 34, வகை 3 பாடசாலைகளும் அமைந்துள்ளன. 68பாடசாலைகளும் மாகாணசபையின் கீழ் அமைந்துள்ள பாடசாலைகளாகும்.

இக்கல்வி வலயத்தின் முதல் வலயக்கல்விப் பணிப்பாளராக க.பாஸ்கரன் கடமையாற்றியதுடன், தொடர்ந்து க.சத்தியநாதன், அகிலா கனகசூரியம், சி.சிறிதரன், யோ.ஜெயச்சந்திரன் ஆகியோர் கடமையாற்றி சென்றுள்ளனர். தற்போது திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுகின்றார்.

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், 2013ஆம் ஆண்டு முதன்முறையாக பரீட்சை திணைக்களத்தின் பெறுபேற்று பகுப்பாய்வு நிரலில் இவ்வலயத்தின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் 97கல்வி வலயங்கள் இலங்கையில் காணப்பட்டன. அவற்றில் சித்திவீதத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 95வது இடத்தினை பெற்றிருந்தது. 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2020 ஆண்டுகளில் முறையே 96, 95, 98, 93, 91, 81, 88 ஆகிய இடங்களைப் பெற்றிருந்த கல்வி வலயம் அதன்பின்னர் வந்த காலத்தில் துரித வளர்ச்சிப் போக்கினை கண்டது. 2021ஆம் 43வது நிலையினையும், 2022இல் 46வது இடத்தினையும் பெற்றுக்கொண்டதோடு, 2023இல் 100கல்வி வலயங்களில் 25வது இடத்தினைப் பெற்றுக்கொண்டது. 10வருடங்களின் பின்னர் கல்வி வலயத்தின் வளர்ச்சி நிலை துரிதமானது. அதேபோன்று உயர்தரப்பெறுபேற்றில் 2024இல் கிழக்கு மாகாணத்தில் முதன்நிலை வலயமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்வி அடைவோடு மட்டுமின்றி இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தேசியமட்டத்தில் சாதனைகளை நிலைநாட்டும் கல்வி வலயமாக அமைந்துள்ளது. விளையாட்டு, தமிழ்மொழித்தினம், சமூகவிஞ்ஞானப்போட்டி, புத்தாக்கம் போன்ற பல துறைகளிலும் சாதனைகளை நிலைநாட்டுகின்றது.

ஆளணி, அடிப்படை வசதி என பல குறைகள் இருந்தாலும் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசார் உத்தியோகத்தர்கள், கல்வி நிர்வாகிகள் அனைவரின் கூட்டுமுயற்சியால் உயர்நிலையை அடைந்துவருகின்ற கல்வி வலயம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

 

அதேபோன்று, இவ்வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிக்கொண்டிருக்கும் போதே, அகிலா கனகசூரியம் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகவும், யோ.ஜெயச்சந்திரன் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றனர். அதேபோன்று இக்கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் போதே சி.சிறிதரன், க.அனந்தரூபன், செ.மகேந்திரகுமார், திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் ஆகியோர் வலயக்கல்விப் பணிப்பாளர்களாக பதவி உயர்வுபெற்றுள்ளனர்.

இவ்வலயம் ஆரம்பிக்கப்பட்டு 15வருடங்கள் நிறைவுபெற்று 16வது வருடத்தில் கால்பதிப்பதனை சிறப்பித்து வலயக்கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை(12.11.2025) கேக்வெட்டி கொண்டாடினர். வலயக்கல்விப் பணிப்பாளர் சிவசங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்களின் சேவைகள் நினைவுகூரப்பட்டு நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன. அதேவேளை வலயம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை சேவையாற்றிக்கொண்டிருப்பவர்களும் பாராட்டப்பட்டனர். இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.