அரச உத்தியோகத்தர்களுக்கான “ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல்” தொடர்பான செயலமர்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரனையின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கான “ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல்” தொடர்பான செயலமர்வானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் மேற்பார்வையில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (03) இடம் பெற்றது.

அரச மற்றும் தனியார் பிரிவுகளில் தொழில் புரியும் அலுவலர்கள் ஓய்வுக்கு தயாராகும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறைத்தல், சமூகமயமாதல் நீண்ட காலம் சேவையாற்றிய பணியாளர்களின் சுய விபரக்கோவையை தயாரிப்பதற்கான வழிகாட்டல் மற்றும் முதுமைப் பருவத்தினை செயற்திறனாக எதிர்கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பான விளக்கங்கள் இதன்போது வழங்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட மொரவெவ பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஏ.நவேஸ்வரன், கல்வி திணைக்களத்தின் ஒய்வு நிலை உளவள ஆலோசகர் எஸ்.ஸ்ரீதரன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த செயலமர்வில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.