எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரண சங்க தலைவருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் கிழக்கு மாகாணத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற குருளைச்சாரண மாணவி பிறைசூடி அபிரிஜாவுக்கு புதிய மாவட்ட செயலகத்தில் வைத்து பாராட்டுக்களையும் கெளரவத்தையும் இன்று (24) வழங்கிவைத்துள்ளார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலத்தில் கல்விகற்கும் மாணவி பிறைசூடி அபிரிஜா 187 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளமையை முன்னிட்டு பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வின் போது மாவட்ட அரசாங்க அதிபருக்கு மாவட்ட சாரணர் சங்கத்தினால் அவரது சேவையை பாராட்டி கெளரவிக்கப்பட்டு நினைவுச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் மட்/மே நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய பாடசாலை அதிபரும் உதவி மாவட்ட ஆணையாளர் (குருளை) திருமதி சிவாஜினி ஜெயராஜ், உதவி மாவட்ட ஆணையாளர் அ.நிசாந்தன் (நிருவாகம்), உதவி மாவட்ட ஆணையாளர் கலாநிதி ப.தினேஸ் (நிதி), மற்றும் வலயங்களுக்கு பொறுப்பான உதவி மாவட்ட ஆணையாளர்கள், மாவட்ட சாரண சங்க தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


