எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி (சமூக சக்தி) தேசிய திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (17) இடம் பெற்றது.
சமூகத்தை வலுவூட்டல் மற்றும் பொருளாதார நன்மைகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “பிரஜாசக்தி”( சமூக சக்தி) தேசிய வேலைத்திட்டமானது அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை மாதம் 04 ஆம் திகதி அலரி மாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட திட்டமானது நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் பங்குபற்றுதலுடன் பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு நிகழ்ச்சி திட்டம் தொடர்பான விழிப்புணர்வுகள் இதன் போது வழங்கப்பட்டன.
அரசாங்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தேசிய அளவிலான திட்டங்களில் பொருளாதார அபிவிருத்தியின் நன்மைகள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளிடையேயும் சமமாக பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதி செய்தல், கிராம மக்கள் மூலமாகவே கிராமப்புறங்களை முழுமையான அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதே பிரஜாசக்தி திட்டத்தின் நோக்கமாகும்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷினி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி),
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் ரஞ்சன் பேரேரா, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் பிரதி பணிப்பாளர்
சந்துனி ராமசிங்க,
ஜனாதிபதியின் உதவி (அபிவிருத்தி நிர்வாகம்) ந.சஞ்ஜீபன், பிரதேச செயலாளர்கள், முப்படையினர், உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
எமது நாட்டின் மொத்த சனத்தொகையில் ஒவ்வொரு 06 பேரில் ஒருவர், பல்பரிமாண வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் 95.3% பேர் கிராமப்புறங்களிலும் தோட்டப் பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்..


