சட்டத்தரணி. திரு. பிரியந்த வீரசூரிய
பொலிஸ் மா அதிபர்
தலைமைக் காரியாலயம்
கொழும்பு-02
ஜயா,
விடயம்:- பிரதேச பொதுமக்கள் பாதுகாப்பையும் நாட்டின் சட்டத்தையும் நிலைநாட்ட வேண்டுகோள்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது, காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு, மற்றும் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி ஆகிய பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை நாட்களில் ஜும்மா தொழுகைக்குப் பின்னர் (நண்பகல் 2 மணிக்கு பின்னர்) பிரதான வீதி மற்றும் கடற்கரை வீதிகளில் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் ஏறி அதிக வேகத்தில் பயணிப்பதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பாதசாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாகவும், நாட்டின் சட்டத்தை பின்பற்றாமலும் நடந்து கொள்வதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக 15-30 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை காணக்கூடியதாகவுள்ளது. இவர்களில் சிலருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் இருப்பதையும் அறிய முடிகிறது.
கல்முனை, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பொலிஸ் நிலையங்களில் போதியளவு மோட்டார் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால், மேற்படி ஆபத்தை விளைவிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்ளை கட்டுப்படுத்துவதில் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என உணரக்கூடியதாகவுள்ளது.
எனவே, இவ்விடயத்தை தங்களின் மேலான கவனத்திற்கொண்டு, இந்த ஆபத்தான சைக்கிள் ஓட்டுனர்ளை கட்டுப்படுத்தும் பொருட்டு அம்பாறையில் இருந்து போக்குவரத்து பொலிஸ் பிரிவொன்றை, மேற்படி பொலிஸ் பிரிவுகளில் வெள்ளிக்கிழமைகளில் விஷேட கடமைகளில் ஈடுபடுத்துமாறு தயவாக கேட்டுக் கொள்கிறேன்.
இந்த விஷேட கடமை ஊடாக, இப்பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், போக்குவரத்து சட்டத்தை முழுமையாக நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவுடன் வேண்டுகின்றேன்.
நன்றி.
இவ்வண்ணம்.
பிரதேச சிவில் பாதுகாப்பு மற்றும்
சமூக அமைப்புகள்
பிரதி/தகவலுக்காக
1. உதவி பொலிஸ் மா அதிபர் – அம்பாறை
2. உதவி பொலிஸ் அத்தியட்டசகர் – கல்முனை
3. தலமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி – கல்முனை
4. நிலையப் பொறுப்பதிகாரி – சாய்ந்தமருது
5. நிலையப் பொறுப்பதிகாரி – காரைதீவு
6. ஆணையாளார், மாநகர சபை – கல்முனை
7. தவிசாளார், பிரதேச சபை – காரைதீவு
—


