சிறந்த பொல்லடிக் கலைஞர்களாக மகுடம் சூடிய மாணவர்கள் அதிபரால் பாராட்டிக் கௌரவிப்பு

Oplus_131072

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முஸ்லிம்களின் பாரம்பரியக் கலையான களிகம்பு எனும் பொல்லடிக் கலையை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் திறம்படக் கற்று, பூர்த்தி செய்த மாணவர்களை சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யூ.எல். நஸார் திங்கட்கிழமை (02) காலை ஆராதனையின் போது சக மாணவர்கள் மத்தியில் பாராட்டிக் கௌரவித்தார்.

அந்தவகையில், சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களான எம்.எம்.எம். சல்பி, என்.எம். நப்லான், எம்.எம்.றினாஸ், என்.எம்.அப்றி, ஜே.எம். அவ்பீக், எம்.ஏ. ஆபித், ஆர். கம்ரான் அஹ்மத், எம்.என்.எம்.மாயிஸ், ஏ.எம்.அஹ்திர், எப்.எம். ஹிஷாம், என்.எம். இன்ஆம், ஏ. மலிக் ஆகியோரும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மாணவர்களான ஆர்.எம். றிவி, எஸ்.எல்.எம். ஹாதீம், எஸ்.எம். ஸராப் மற்றும் சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் பாடசாலை மாணவன் எஸ்.எம்.அஸ்வி மற்றும் மாளிகைக்காடு அல்- ஹுஸைன் பாடசாலை மாணவன் ஏ.ஆர்.ஹஸன் ஆகிய 17 மாணவர்கள் பாடசாலையில் கல்வியையும் கற்றுக் கொண்டு, சுமார் 1 வருட காலம் இக்கலையை மிக ஆர்வத்தோடு கற்று, “இளைய சிறந்த பொல்லடிக் கலைஞர்”களாக மகுடம் சூடிக் கொண்டனர்.

இப்பாரம்பரியக் கலையை மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதில் காரணகர்த்தாவாகவும் இப்பாரம்பரியக் கலையை அழிய விடாது அதனை இளைய சமுதாயத்தினருக்கும் பயிற்சி வழங்கி இன்றும் உயிரோட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஊடகவியலாளரும் பல்துறைக் கலைஞருமான எம்.எம்.எம்.ஸாகிர் மற்றும் முதுபெரும் பொல்லடிக் கலைஞர் சிரேஷ்ட அண்ணாவியார் கலாபூஷணம் ஏ. இஸ்ஸதீன் ஆகியோரின் சிறப்பான தன்னலமில்லா சேவைக்கு சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யூ.எல். நஸார் இதன்போது நன்றி தெரிவித்தார்.

புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சின் கீழ் இயங்கும் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் வைத்து முஸ்லிம்களின் பாரம்பரியக் கலையான பொல்லடி எனும் களிகம்பு கலையைக் கற்று பூர்த்தி செய்த இம்மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மே (25) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தலைமையில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது