( வாஸ் கூஞ்ஞ) 30.05.2025
மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலையின் நிர்வாகத்தினை மத்திய சுகாதார அமைச்சிடம் கையளிப்பதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் ஏகோபித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதன்கிழமை (28) இடம்பெற்ற மன்னார் மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகருக்குள் அமைந்துள்ள மன்னார் பொது வைத்தியசாலை நூறு வருடங்களுக்கு மேற்பட்ட ஒரு வைத்தியசாலையாகும்.
இது தற்பொழுது மாகாண சபையின் கீழ் இயங்கி வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் இந்த வைத்தியசாலை ஒன்றே பொது வைத்தியசாலையாக இயங்கி வருகின்றது.
ஆனால் இன்றும் இந்த வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் மிக அவசிய சிகிச்சைகளுக்கு அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வைத்தியசாலைகளுக்கே அழைத்துச் செல்லும் நிலை தொடர்ந்து வருகின்றது.
இந்த நிலை மாற்றம் பெற வேண்டுமானால் மன்னார் பொது வைத்தியசாலை மத்திய சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து இதற்கான பிரேரணை வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் , சமூக அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளினால் ஒருமித்து சமர்ப்பிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து புதன்கிழமை (28.05) நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மன்னர் மாவட்டப் பொதுவைத்தியசாலையின் நிர்வாகத்தினை மத்திய சுகாதார அமைச்சிடம் கையளிப்பதற்கு ஏகோபித்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதனை உத்தியோகபூரவமாக ஜனாதிபதிஇ சுகாதார அமைச்சர் மற்றும் வட மாகாண ஆளுநருக்கும் அறிவிப்பது என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்தது.
இந்த முன்மொழிவினை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏதுமில்லை என்று தெரிவித்ததுடன் எனினும் இது மாகாண சபைகளின் அதிகாரங்களினை விட்டுக்கொடுக்கும் ஒரு செயற்பாடாகப் பார்க்கப்படக்கூடும் என்றும் இங்கு அச்சம் வெளியிடப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் திரு.அசாத்இ மன்னார் மக்களின் மருத்துவத் தேவைகளைனை பூர்த்தி செய்யக்கூடிய ஆளணி மற்றும் இதர வளங்களினை மேம்படுத்துவதற்கு உள்ள ஒரேவழி வைத்தியசாலையினை மத்திய அரசிடம் கையளிப்பதே ஆகும் என்று குறிப்பிட்டார்.
இதன் பொழுது கருத்து தெரிவித்த மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் தர்மராஜன் வினோதன் சுகாதார சேவையினை மக்களுக்கு தடையின்றி , தரமானதாகவும் , பாதுகாப்பானதாகவும் வழங்கவேண்டியது அரசியல் அமைப்பினால் சுகாதாரத்துறைக்கு பணிக்கப்பட்ட பொறுப்பாகும் என்று எடுத்துக்கூறியதுடன்
நாட்டின் சகல பகுதிகளிலும் ஒரே தர நியமத்துடன் விசேட சிகிச்சைகளினை வழங்குவதற்கு சகல மூன்றாம் நிலை விசேட மருத்துவ சேவைகளினை வழங்கும் நிறுவனங்களும் ஒரே நிர்வாகத்தின் கீழ் அதாவது மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் இருக்கவேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.
இதனையடுத்து ஒருங்கிணைப்பு குழு மன்னர் மாவட்டப் பொதுவைத்தியசாலையின் நிர்வாகத்தினை மத்திய சுகாதார அமைச்சிடம் கையளிப்பதற்கான முன்மொழிவினை ஏகோபித்து ஏற்றுக்கொண்டது.


