பாறுக் ஷிஹான்
இலங்கையில் ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்வதற்குரிய மூலிகைகள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. குறிப்பாக இந்தியா, நைஜீரியா, ஈரான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பெரும்பாலான மூலிகைகளைப் பெற்று குறித்த மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக பெருமளவிலான நிதிகளை அரசாங்கம் செலவிட்டு வருகிறது.
இதற்காக செலவிடப்படும் செலவீனங்களை குறைத்து உள்நாட்டில் தொழில் வாய்ப்பினை ஊக்குவித்து பாரிய திட்டமிடல்களுடன் ஆயுர்வேத மருந்துகளை உள்நாட்டிலே உற்பத்தி செய்வதற்கு சுதேச மருத்துவத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க சுதேச மருத்துவத் திணைக்களம் நாடு தழுவிய ரீதியில் சமூக மூலிகைத் தோட்டங்களை நிறுவுவதற்குரிய பாரிய வேலைத்திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தினை கிழக்கு மாகாணத்தில் செயற்படுத்துவதற்கு போதுமான வளங்கள் இருப்பதனால் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மூலிகைத் தோட்டங்களை அமைப்பதற்குரிய ஆரம்பக்கட்டப் பணிகளை சுதேச மருத்துவத் திணைக்களம் முன்னெடுத்து வருகிறது.
கிழக்கு மாகாணத்தில் குறித்த திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் டொக்டர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் உயரதிகாரிகள், அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியர்கள், ஆயுர்வேத வைத்தியசாலைகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் பொருத்தமான இடங்களில் மூலிகைத் தோட்டங்களை அமைப்பது தொடர்பாகவும் சிறு பண்னையாளர்களையும் தோட்ட செய்கையாளர்களையும் இதன்பால் ஊக்குவித்து அவர்களிடமிருந்து மூலிகைகளைப் பெற்று மருந்துகளை உற்பத்தி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.


