வி.ரி.சகாதேவராஜா. )
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க புலமைத்துவ குழு, வாரம்தோறும் நடத்திவரும் “மட்டக்களப்பின் புலமைத்
துவ ஊற்றுக் கண்கள்” , பேசப்படாத பக்கங்கள் தொடரின் – 6 வது நிகழ்வானது மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் கடந்த 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை தலைவரின் காரியாலய அவைக்கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் காரைதீவைச் சேர்ந்த “அமரர்
திரு.கைலாயபிள்ளை கணபதிப்பிள்ளை “
அவர்களைப்பற்றி, கிழக்கு பல்கலைக்கழகத்தின்
புவியியல்துறைத் தலைவர், சிரேஸ்ட விரிவுரையாளர் இ. கிருபைராஜா
அவர்களால் விரிவான சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
மட்டக்களப்புத்தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் ரஞ்சிதமூர்த்தி தலைமையுரையாற்றுகையில்…
மட்டக்களப்பின் புவியியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியோடு தொடர்புடைய ஒரு முக்கிய ஆளுமையான கைலாயபிள்ளை கணபதிப்பிள்ளை (FRGS) அவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை நினைவுகூர்வது மிகவும் பொருத்தமானதாகும் என குறிப்பிட்டார்.
மேலும்,
லண்டனிலுள்ள றோயல் புவியியல் கழகத்தின் உறுப்பினர் (Fellow of the Royal Geographical Society – FRGS) என்ற உயரிய கல்விசார் கௌரவத்தைப் பெற்றிருப்பது, புவியியல் துறையில் அவருக்கிருந்த புலமையையும் ஆய்வுப் பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகின்றது.
பின்னர், சிரேஸ்ட விரிவுரையாளர்
இ. கிருபைராஜா, அமரர் கைலாயபிள்ளை கணபதிப்பிள்ளை அவர்களைப்பற்றி,
ஊரும் வேரும்,
இளமையும் புலமையும்,
பணியும் பாணியும்,
புவியலும் புறமும்,
மட்டுமா புவியியல் இன்னும் நான்கு உள்ளடக்கத்துடன் உரை அமைந்திருந்தது.
ஊரும் வேரும்- “மண்ணில் பிறந்ததால் பெருமை தேடிக்கொண்டோரும் உண்டு, தங்களின் பிறப்பால் மண்ணுக்குப் பெருமை தேடிக்கொடுத்தோரும் உண்டு”
” சுவாமி விபுலாநந்தர் பிறந்ததால் பெருமை பெற்ற காரைதீவு மண்ணில், அம்மண்ணுக்குப் பெருமைக்கு மேல் பெருமை சேர்க்கத் தோன்றியவர்கள் வரிசையில் திரு.கைலாயபிள்ளை கணபதிப்பிள்ளை அவர்களும் ஒருவர். கணபதிப்பிள்ளை அவர்கள் கயிலாயபிள்ளை தோம்புதோருக்கும், இராசம்மாவுக்கும் ஆறு சகோதரங்களுடன் பிறந்தவர். மட்டக்களப்பு நல்லையா மாஸ்டர் சகோதரியான கண்மணியை மணம் செய்துகொண்டு மட்டக்களப்பில் வாழ்ந்தார். கண்மணி – கணபதிப்பிள்ளை தம்பதியினருக்கு சித்திரா மற்றும் உமா என இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தனர்.சித்திராவை மருத்துவராகவும், உமாவை உயிரியல் ஆசிரியராகவும் உருவாக்கினார்.
அனைவரும் லண்டனில் வசிக்கின்றனர்.
கணபதிப்பிள்ளை அவர்கள் தனது 90வது வயதில் லண்டனில் இயற்கை எய்தினார்.
இளமையும் புலமையும் பற்றி பார்க்கும் போது
கணபதிப்பிள்ளை, காரைதீவில் துடிப்புமிக்க சிறுவனாகவும், தூரநோக்குடைய இளைஞனாகவும், கல்வியில் கரைகாணத் துடிக்கும் ஆர்வலனாகவும், மிளிர்ந்தார். கலைத்துறையில் பட்டம் பெற்றார்.
லண்டன், ராயல் ஜியோகிராஃபிக்கல் சொசைட்டியால் w F.R.G.S (Fellow of Royal Geographical Society) கௌரவிக்கப்பட்டார்.
லண்டன் இல் Dip in GEOGRAPHY தகைமைச் சான்றிதழ் நிறைவு செய்திருந்தார்.
இளமையும் புலமையும் – பற்றி நோக்கும் போது
தமிழ், சைவம், வரலாறு, புவியியல், பண்பாடு என பல துறைகளில் பன்முக ஆளுமைகளை பறைசாற்றியிருந்தார்.தமிழை வளர்த்தார், சைவத்தை நேசித்தார், புவியலைச் சுவாசித்தார்.
இளம் பராயத்திலேயே சகல துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி நல் மாணாக்கனாக, சிந்தனையாளனாக ஊரார் மதிக்கும்படி நடந்து காட்டியவர்.
இவரது பணியும் பாணியும் பற்றி நாம் ஆராயும் போது ஆசிரியர் பணியை கையில் எடுத்துக்கொண்டு ,ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கப் புறப்பட்டார்.
1955 இல் மட்டக்களப்பு கல்லடி-உப்போடை சிவானந்தா வித்தியாலயத்தில் அதிபராக பணியைப் பொறுப்பேற்றார்.சிவானந்தாவின் சிறப்புமிகு அதிபர்கள் வரிசையில் அமரர் கணபதிப்பிள்ளை ஒரு சிகரமாய் இன்றுவரை திகழ்கின்றார். நடமாடும் பல்கலைக்கழகம் எனப் பெயர் பெற்ற அவரின் காலம் பொற்காலம் எனலாம்.
தமது எண்ணங்களையும், சிந்தனைகளையும் கல்வி உலகுக்கு கொடுப்பதில் குறியாய் உழைத்தார்.
” சுவாமி விபுலானந்தரின் கல்விக் கோட்பாடு”- கல்வி கற்பிக்கப்படுவது முறையல்ல… கல்வி ஊட்டப்படுவதே முறை. அவரின் வழி நின்று கல்விக்காக உழைத்தவர் கணபதிப்பிள்ளை அவர்கள்.சேவைகள் செய்தால் போதும் தெய்வத்தைத் தெரிவோம். மதிப்பளித்தல், மன்னித்தல் என்னும் மாண்புகளை இறுதிவரை கடைப்பிடித்த நல்லாசான். என்றார்.
அடுத்து மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராசா நன்றியை கூறினார்


