தனியார் வங்கியொன்றின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஒத்த போலி இணையத்தளத்தை உருவாக்கி, நபரொருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாரியபொல கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாடொன்றிற்கு அமைய இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
குறித்த வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்றே போலி இணையத்தளமொன்றை உருவாக்கி, அதன் ஊடாக நபரொருவரை ஏமாற்றி அவரது வங்கிக் கணக்கின் இரகசியத் தரவுகளைப் பெற்றுக்கொண்டு, கணக்கிலிருந்த 10 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய, இந்த மோசடியை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் தனியார் நிறுவனமொன்றின் தரவு உள்ளீட்டு உத்தியோகத்தர் (Data Entry Officer) ஒருவர் நேற்று (26) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வாரியபொல கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


