செங்கலடி விவேகானந்தா பாடசாலைக்கு பாண்ட் வாத்தியக் கருவிகள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு, செங்கலடி கணபதிநகர் விவேகானந்தா பாடசாலைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாகப் பாண்ட் வாத்தியக் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தளவாய் வட்டார உறுப்பினர் செ. நிலாந்தனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கலை, கலாசார மற்றும் இசைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு அண்மையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபர் திரு. க. சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏறாவூர்ப்பற்று – செங்கலடி பிரதேச சபையின் உப தவிசாளர் திரு. சி. சர்வானந்தன், பிரதேச சபை உறுப்பினர் திரு. செ. நிலாந்தன், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் திரு. ரகுபரன், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செங்கலடி பகுதிக்கான நிர்வாகத்தினர், கட்சி ஆதரவாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்,

மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு இணையாக அவர்களது கலை, கலாசார மற்றும் இசைத் திறன்களையும் ஊக்குவிப்பது அவசியமாகும். அந்த வகையில், வழங்கப்பட்டுள்ள பாண்ட் வாத்தியக் கருவிகள் மாணவர்களின் இசைத் திறமைகளை வளர்ப்பதற்கும், பாடசாலையின் பாண்ட் குழுவை மேலும் வலுப்படுத்துவதற்கும் பெரிதும் உதவியாக அமையும்.

அத்துடன், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பாடசாலையின் முக்கிய நிகழ்வுகளைச் சிறப்பிப்பதற்கும் இந்த இசைக் கருவிகள் பயனுள்ளதாக அமையும். மாணவர்களின் ஆளுமை விருத்தி மற்றும் திறன் மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு, இதுபோன்ற உதவிகளைத் தன்னால் இயன்றளவு தொடர்ச்சியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, பாடசாலை மாணவர்களின் திறன் விருத்திக்கு உதவும் வகையில் பாண்ட் வாத்தியக் கருவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கும், அதற்கான கோரிக்கையை முன்வைத்த பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தனுக்கும் பாடசாலைச் சமூகம் தமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.