தனித் தமிழ் அரசு உருவாக்கத்தின் சட்டச் சவால்கள் குறித்து ஹொங்கொங் பல்கலைக்கழகம் ஆய்வு

இலங்கையில் தனித் தமிழ் அரசு உருவாக்கம் தொடர்பான சட்ட மற்றும் அரசியல் கேள்விகளை ஆராய்வதற்காக, ஹொங்கொங்கின் சீனப் பல்கலைக்கழகத்தின் (CUHK) சட்டப் பீடம் முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய ஆய்வாளர் ஒருவரை நியமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பேராசிரியர் அலெக்ஸ் கிரீன் தலைமையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் (TGTE) இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

தனித் தமிழ் அரசு உருவாக்கம் குறித்து தொடரும் அரசியல் மற்றும் சட்ட விவாதங்களை ஆராய்வதும், அவ்வாறு ஒரு புதிய அரசு உருவாவதில் உள்ள சட்டச் சவால்களை மதிப்பிடுவதும் திட்டத்தின் நோக்கம் எனப் பணியிட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சவால்களைப் புறநிலையாக மதிப்பிடும் கல்விசார் ஆய்வாகப் பல்கலைக்கழகம் திட்டத்தை விவரித்துள்ளது.

பேராசிரியர் கிரீன் எழுதிய Statehood as Political Community: International Law and the Emergence of New States என்ற நூல் இந்த ஆய்வுக்கான சட்டக் கோட்பாட்டு அடிப்படையாக அமைகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் 2024ஆம் ஆண்டு வெளியிட்ட இந்நூல், புதிய அரசுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும், அந்தச் செயல்முறையில் சர்வதேசச் சட்டம் வகிக்கும் பங்கையும் ஆராய்கிறது.

சீனாவின் ஒரு பகுதியாக ஹொங்கொங் உள்ளதாலும், இலங்கையுடன் சீனா நெருக்கமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளைப் பேணுவதாலும், இந்த ஆய்வுத் திட்டம் பிராந்திய அரசியலிலும் கவனம் பெற்றுள்ளது. இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான விவாதங்களின் பின்னணியில் இந்த ஆய்வு எவ்வாறு பார்க்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தனித் தமிழீழத்தை அமைக்கும் நோக்குடன் ஆயுதப் போராட்டம் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), 2009ஆம் ஆண்டு இலங்கை அரசுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர். அந்த வரலாற்றுப் பின்னணியில், தமிழீழம் தொடர்பான விவாதத்தைப் புதிய அரசுகளின் உருவாக்கம் குறித்த சர்வதேசச் சட்ட ஆய்வின் களத்திற்கும் இந்தத் திட்டம் கொண்டுவருகிறது.