கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்புடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக பல முரண்பாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிகளைப் ப்பகிஷ்கரித்து கிழக்குகுப்பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் தே.வித்தியாதரன் தலைமையில் நடைபெற்ற இந்த பணிபகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்க கோரும் பல்வேறு கோஷங்களை எழுப்பியும், சுலோகங்களை தாங்கியபடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்விசாரா ஊழியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஊழியர் சங்க தலைவர் கருத்து வெளியிடுகையில்,2027 வரவு செலவுத் திட்டத்தில் கல்விசார் ஊழியர்களின் கல்விக் கொடுப்பனவு அதிகரிக்கப்படுவது போல், கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த இழப்பீட்டுக் கொடுப்பனவும் அதற்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும் என்பது எமது முக்கிய கோரிக்கையாகும்.

அதேவேளை, 2016-2020 காலப்பகுதியில் ஏனைய சேவைகளுக்கு 107% சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டபோதும், கல்விசாரா ஊழியர்களுக்கு 92% மாத்திரமே வழங்கப்பட்டது. மேலும், 2025ஆம் ஆண்டுச் சம்பளத் திருத்தத்தின்போது பேராசிரியர்களின் சம்பளத்துடன் தொடர்புடைய வகையில் கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த இழப்பீட்டுக் கொடுப்பனவு சுமார் 9% குறைக்கப்பட்டது. அத்துடன் 2025 வரவு செலவுத் திட்டத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவிற்கான விகிதம் 1/160 இலிருந்து 1/240 ஆகக் குறைக்கப்பட்டமையை மேலும் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டமானது, அரச பல்கலைக்கழக ஊழியர்களின் பல்வேறு சலுகைகளைக் குறைத்ததன் மூலம் ஊழியர்களுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்ததுடன் பல்கலைக்கழக ஊழியர்கள் ஏற்கனவே எதிர்கொண்டு வந்த பல பிரச்சினைகளையும் மேலும் தீவிரப்படுத்தியிருந்தது.

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு, கௌரவ பிரதமர், கல்வி அமைச்சர் மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்த போதிலும், இரு தரப்பினருக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாடுகளை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றத் தவறியுள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் அலட்சியம் காட்டுவது நாளுக்கு நாள் வெளிப்படையாகி வருகின்றது. பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தபோதிலும், கௌரவ ஜனாதிபதியிடமிருந்தும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

அரசாங்கத்தின் தொடர்ச்சியான இந்தப் புறக்கணிப்பைக் கருத்தில்கொண்டு, பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்களும் இணைந்து ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு நீண்டகாலமாக முன்வைத்து வருகின்ற கோரிக்கைகளுக்குத் தெளிவான தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளமைக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதே இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் பிரதான நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.