எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில்1 முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதாரக் கணக்கெடுப்பின் ஊடாக விவசாயத் துறை சார்ந்த தகவல்களைச் சேகரிக்கும் வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் நோக்கில் பிரதேச செயலக பிரிவுகளில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபவுள்ள புதிய கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நிகழ்வு இன்று புதன்கிழமை (18) புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டத் தொகைமதிப்பு ஆணையாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளிவிபரவியலாளரும் உதவித் தொகைமதிப்பு அத்தியட்சகருமான ரீ.ஜெய்தனனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரும் பிரதி தொகைமதிப்பு ஆணையாளருமான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலய மேற்பார்வை உத்தியோகத்தரும் சிரேஷ்ட புள்ளிவிபர உத்தியோகத்தருமான எம்.எஸ்.எம். றூமி உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் நாட்டின் விவசாயத் துறையில் காணப்படும் முன்னேற்றங்கள் மற்றும் சவால்களை ஆராய்ந்து, எதிர்கால விவசாய அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு இக்கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தகவல்கள் பெரிதும் உதவியாக அமையும் எனத் தெரிவித்ததோடு மட்டுமல்லாது இக்கணக்கெடுப்பின் வெற்றியானது துல்லியமான தகவல் சேகரிப்பிலேயே தங்கியுள்ளதாqqல், பொதுமக்கள் கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு உண்மையான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது, கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் துல்லியமான புள்ளிவிபரங்களைச் சேகரித்து, அவற்றை முறையாக இற்றைப்படுத்த வேண்டும் எனவும் உயர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.


