போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் மக்களது வரிப்பணம் மக்களுக்கே என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக சுகாதாரப் பகுதியின் ஊடாக பிரதேச சபை நிதி ஒதுக்கத்தின் கீழ் கற்பினித் தாய்மாருக்கான போசாக்கு உணவுப் பொதி வழங்கும் செயற்திட்டம் இன்றைய தினம் (18) போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் வி.மதிமேனன் தலைமையில் இடம்பெற்றது.
போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் 10 வட்டாரங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 100 கற்பினித் தாய்மாருக்கு இன்றைய தினம் முதற்கட்டமாக குறித்த போசாக்குப் பொதி சபையின் சொந்த நிதியில் இருந்து பொது மக்கள் நலன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதேச சபை உபதவிசாளர், உறுப்பினகள், செயலாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கற்பினித் தாய்மார்கள் எனப் பலரும் கலந்து கொண்டு போசாக்குப் பொதிகளைத் தாய்மாருக்கு வழங்கி வைத்தனர்.
இதன்போது தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் பிறப்பு வீதம் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதில் தமிழர்களின் பிறப்பு வீதம் அதளபாதாளத்தில் உள்ளது. பிறப்பு வீதத்தினை தமிழர்களாகிய நாங்கள் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
கடந்த 30 வருட போராட்டத்திலே நாங்கள் பல உயிர்களைத் தியாகம் செய்துள்ளோம். எமது இனத்திற்காகவும், எமது உரிமைக்காகவுமான போராட்டமாகக் காணப்பட்டாலும் தமிழர்களாகியா நாம் இறுதிப்போரின் போது 150000 க்கும் அதிகமான உயிர்களைப் பலி கொடுத்துள்ளோம்.
இந்த நாட்டிலே எங்களுக்கான சமஉரிமை, அதிகாரம் என்பவற்றிற்காக 30 வருட போராட்டத்தை ஆரம்பித்து, அதிலே பல இழப்புகளையும், சனத்தொகை வீழ்ச்சியையும் சந்தித்துள்ளோம்.
ஆயுத போராட்டம் மௌனித்த பின்னரும் கூட எமக்கான உரிமையைக் கோரி இன்னும் அரசியல் ரீதியான போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.
அந்த வகையிலே போரதீவுப் பற்றுப் பிரதேச சபையினால் எமது மக்களுக்குரிய எல்லா விடயங்களையும் பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும், பல விடயங்களை எமது மக்களுக்காக முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த உதவிகள் மாத்திரமல்ல உங்கள் பிள்ளைகள் பிறந்து பாலர் பாடசாலைக் கல்வியினை எமது சபை பாலர் பாடசாலைகளிலேயே கல்வி பயில முடியும். அதுமட்டமல்லாது கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கான திட்டங்களும் உள்ளன. அத்துடன் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கா வட்டாரங்களின் பொது நூலகங்களில் ஈ-நூலகங்களாக மாற்றும் செயற்திட்டங்களும் உள்ளன. அத்துடன் நகர்ப்புற வசதிகளைப் போன்று இங்கும் எமது பிள்ளைகளுக்கான வசதி வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக வெளிநாட்டு தூதரகங்களுடன் கதைத்து வருகின்றோம் என்று தெரிவித்தார்.





