ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் வெளிநாட்டுப் பெண் ஒருவர், ஐந்து வயது சிறுமியின் காணொளியைப் பெற்றோரின் அனுமதியின்றி Snapchat சமூக ஊடகத்தில் பதிவிட்டமைக்காக ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். சிறைத்தண்டனையைத் தொடர்ந்து அவரை நாட்டிலிருந்து நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டுபாயில் வசித்து வந்த குறித்த பெண், தனது உறவினரான சிறுமியின் காணொளியைப் பொதுவான Snapchat கணக்கில் பதிவிட்டுள்ளார். அந்தக் காணொளியில், சிறுமி உணவு வகையொன்றின் பெயரைத் தவறாக உச்சரித்து நகைச்சுவையாகப் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
குறித்த காணொளியை Snapchat ஊடாக 11,000இற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
எனினும், மேலோட்டமாகப் பார்க்கும்போது பாதிப்பற்ற நகைச்சுவைக் காணொளியாகத் தோன்றிய இந்தச் சம்பவம், பெண்ணுக்கு சிறைத்தண்டனை மற்றும் நாடு கடத்தல் உத்தரவு விதிக்கப்படும் அளவுக்குச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற திகதி மற்றும் குறித்த பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


