மாவீரர் மாதத்தின் 02ம் வாரம் தரவையில் அனுஸ்டிப்பு… மாவீரர் தினத்தை முன்னிட்டு 15ம் திகதி மாவீரர் துயிலுல்ல துப்பரவுப் பணிகளில் ஈடுபட மக்களுக்கு அழைப்பு…

(தரவை மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு)

கார்த்திகை 27 மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகப் போராடி இன்னுயிரை ஈந்த மாவீரர்களை நினைவேந்தும் முகமாக மாவீரர் தின நிகழ்வுகள் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் ஏற்பாடாகி வருகின்ற நிலையில் மட்டக்களப்பு கிரான் தரவை துயிலுமில்லத்தில் துப்பரவு மற்றும் நிகழ்வு ஏற்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தரவை மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழு மற்றும் தாயக செயலணி என்பவற்றின் ஏற்பாட்டில் இம் மாவீரர் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக மாவீரர் மாதத்தின் முதல் நாள் துப்பரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், இரண்டாம் வாரத்தை அனுஸ்டிக்கும் முகமாக துயிலுமில்லத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

காலநிலை காரணமாக துப்பரவுப் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ள முடியாதமையால் எதிர்வரும் 15ம் திகதி அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து துப்பரவுப் பணிகளை மும்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் எதிர்வரும் 15ம் திகதி காலை சிரமதானப் பணிக்கு அனைத்து மக்களுக்கும் இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டதுடன், மாவீர்களுக்காக நன்றிக்கடன் செலுத்தும் நன்நாளிலும் அனைவரும் வருகை தந்து நினைவேந்த வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

இன்றைய தினம் ஏற்பாட்டுக் குழுவினால் மாவீரர் கல்லறைகளுக்கு மலர் தூவி அகவணக்கம் செலுத்தி நினைவேந்தல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.