வடகிழக்கு இந்தியத் தமிழ்ச்சங்கத்தின் உலக அமைதிக்கான பயணம்!

வடகிழக்கு இந்திய மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களை ஒருங்கிணைத்து குவகாத்தியைத் தலைமையிடமாகக்கொண்டு வடகிழக்கு இந்தியத்தமிழ்ச்சங்கம் இயங்கிவருகிறது. தமிழ்மொழி இலக்கியம் தமிழர் பண்பாடு கலை கலாச்சாரம் ஆகியவற்றை பிறமாநிலத்தவர்களும் அறியும் வகையில் இச்சங்கம் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.

அதன் தொடர்ச்சியாக நவம்பர் நான்காம் நாள் குவகாத்திக்கு வருகைத்தந்த உலக அமைதி பேரமைப்பின் சுவிஸ் நாட்டுத்தலைவரும் உலக ஆன்மிக நல்லிணக்க கட்டமைப்பின் சுவிஸ் தலைவரும் சுவிஸ் முருகர் கோயிலின் நிறுவனர் மற்றும்முன்னாள் நீண்டகாலத் தலைவருமான வே. கணேசகுமார் மற்றும் இலண்டன் தமிழவையின் நிருவாகியும் சிவனடியாருமான சிவா தம்பு ஆகியோருக்கு குவகாத்தி பூர்வ திருப்பதி அருள்மிகு பாலாஜிக்கோயிலில் சிறப்பு செய்யப்பட்டது.
அப்போது நடைபெற்ற கூட்டத்தில் வே. கணேச குமார் பேசியதாவது:

நாங்கள் உலக அமைதியை வலியுறுத்தி உலகநாடுகள் பலவற்றிற்கு பயணம் மேற்கொண்டு வருகிறோம். பூட்டானில் நடைபெறும் அமைதி மாநாட்டுக்கு செல்லும் வழியில் குவகாத்தியில் சிறப்பாக இயங்கும் வடகிழக்கு இந்தியத் தமிழ்ச்சங்க செயல்பாட்டை அறிந்து இங்கு வந்தோம். இச்சங்கத்திற்கு உலக ஒற்றுமையிலும் அமைதியிலும் இருக்கும் அக்கறையை எங்களை சிறப்பு செய்வதின் மூலம் அறிந்து பெருமைக்கொள்கிறோம்.

. இச்சங்கம் தமிழ் தமிழர் நலனில் காட்டும் ஈடுபாடு உலகத்திலுள்ள மற்ற தமிழ்ச் சங்கத்திற்கு முன்னுதாரணக இருக்கிறது. சங்க நிருவாகிகள் தமிழர்களுக்கே உரிய விருந்தோம்பல் பண்பில் சிறந்தோங்குவதைப்பார்த்து மகிழ்ச்சியடைகின்றோம்.

இச்சங்கத்தின் சேவையையும் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் விதத்தில் தாயகமான தமிழக அரசு நிதி உதவி வழங்கி குவகாத்தியில் சங்கத்திற்கென்று தனி கட்டடம் அமைத்துக் கொடுக்க வேண்டும். எங்களைப் போன்ற வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் நிச்சயமாக உதவியாக இருப்போம்’ என பேசினார்.