சுவிட்சர்லாந்தில் ஏழு நாட்களுக்கான உணவுப் பொருட்களை வாங்கி வைக்க வேண்டுமா? மக்களிடையே பரவும் தகவலின் உண்மை என்ன?

சுவிட்சர்லாந்தில் ஏழு நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வீட்டில் வாங்கி வைத்திருக்க வேண்டும் என்ற தகவல், அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

இதனால் சிலர், நாட்டில் ஏதாவது அவசரநிலை ஏற்படப்போகின்றதா? உணவுப் பற்றாக்குறை உருவாகுமா? அல்லது போர் அபாயம் காரணமாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதா? என்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.

ஆனால் பொதுமக்கள் இதனால் அச்சமடையத் தேவையில்லை.

ஏனெனில், இது சுவிஸ் மத்திய அரசு புதிதாக வெளியிட்ட அவசரகால எச்சரிக்கை அல்ல.

சுவிட்சர்லாந்தின் மத்திய பொருளாதார விநியோக அலுவலகமான BWL, நீண்டகாலமாகவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அவசரகால உணவுக் கையிருப்பை வைத்திருக்குமாறு பரிந்துரைத்து வருகின்றது.

இதனை ஜெர்மன் மொழியில் Notvorrat என்று அழைக்கின்றனர்.

இயற்கை அனர்த்தங்கள், கடுமையான காலநிலை, மின்சாரத் தடை அல்லது பொருட்களின் விநியோகத்தில் தற்காலிக இடையூறுகள் ஏற்படும்போது, குடும்பங்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளைச் சமாளிப்பதே இந்தப் பரிந்துரையின் நோக்கமாகும்.

அரசின் வழிகாட்டுதலின்படி, சுமார் ஏழு நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும், ஒருவருக்கு குறைந்தது ஒன்பது லிட்டர் குடிநீரையும் வீட்டில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒன்பது லிட்டர் தண்ணீர், குடிப்பதற்கும் சமைப்பதற்கும் மூன்று நாட்களுக்கான அளவாகும்.

அத்துடன் அத்தியாவசிய மருந்துகள், மின்கல விளக்கு, வானொலி மற்றும் சிறிய தொகைப் பணம் போன்றவற்றையும் வைத்திருக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இங்கே பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடயம் ஒன்று உள்ளது.

இது அனைவரும் உடனடியாகக் கடைகளுக்குச் சென்று அதிகளவில் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவு அல்ல.

அதேபோன்று, சுவிட்சர்லாந்தில் உடனடியாகப் போர் அல்லது உணவுப் பற்றாக்குறை ஏற்படப்போகின்றது என்பதற்கான அறிவிப்பும் அல்ல.

எனவே, பொதுமக்கள் பதற்றமடையாமல், தங்கள் வழக்கமான பொருட்கொள்வனவுகளின்போது தேவையான அத்தியாவசியப் பொருட்களைப் படிப்படியாகச் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

பழைய அரசுப் பரிந்துரையைப் புதிய அவசர எச்சரிக்கையாகக் கருத வேண்டாம்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர், சுவிஸ் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

அச்சம் வேண்டாம்! விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கையும் போதும்!

சுபீட்சம் செய்திகள் – சுவிட்சர்லாந்து பதிப்பு.

மக்கள்நலமே எமது நோக்கம்.